வெள்ளி, 15 ஏப்ரல், 2011

நெகிழ்வூட்டும் அறவுரைகள்



6412. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு 2
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Volume :7 Book :81
6413. அனஸ்(ரலி) அறிவித்தார்.
(அகழ்ப் போருக்காக அகழ் தோண்டிக் கொண்டிருந்த போது) நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நிலையான) வாழ்க்கை இல்லை; எனவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிலையான மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக!' என்று (பாடியபடி) சொன்னார்கள். 3
Volume :7 Book :81
6414. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாயிதீ(ரலி) அறிவித்தார்.
அகழ்ப் போரின்போது நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்து கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்துவிட்டு, 'இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு (நிரந்தரமான) வாழ்க்கை இல்லை; எனவே, (அதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!' என்று (பாடியபடி) கூறினார்கள்.4
இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
Volume :7 Book :81
6415. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
'சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (ம்டைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.6 காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் இறைவழியில் (போருக்குச்) செல்வது உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்'7 என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
Volume :7 Book :81
6416. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு' என்றார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
'நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு' என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.9
Volume :7 Book :81
6417. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:
(நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம் தான் அவனைச் 'சூழ்ந்துள்ள' அல்லது 'சூழ்ந்து கொண்டுவிட்ட' வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும். 11
Volume :7 Book :81
6418. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (முந்தைய ஹதீஸில் உள்ளபடி) சில கோடுகள் வரைந்தார்கள். பிறகு '(சதுரத்தின் நடுவிலுள்ள கோட்டைக் காட்டி) இதுதான் (மனிதனின்) எதிர்பார்ப்புகள் (என்றும், சதுரத்தைக் காட்டி) இதுதான் அவனுடைய ஆயுள் (என்றும் கூறிவிட்டு,) இவ்வாறு அவன் (எதிர்பார்ப்புகளில்) இருந்து கொண்டிருக்கும்போது அரும்லுள்ள (மரணம் - ஆயுள் முடிவு எனும்) கோடு அவனை வந்தடைகிறது' என்று கூறினார்கள்.
Volume :7 Book :81
6419. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு மனிதனின் வயது அறுபது ஆண்டுகளை எட்டும் வரை வாழ்நாளைத் தள்ளிப் போட்ட பிறகு அவன் (ஆயுள் விஷயத்தில்) கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
Volume :7 Book :81
6420. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும்.
1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம்.
2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
Volume :7 Book :81
6421. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன:
1. பொருளாசை.
2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :81
6422. முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார்.
(நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருந்து வாளி ஒன்றில் (ம்ணற்று) நீர் எடுத்து (தம் வாயில் ஊற்றி பரக்கத்திற்காக என் மீது) உமிழ்ந்தது எனக்கு நினைவுண்டு.15
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்.
Volume :7 Book :81
6423. (தொடர்ந்து) முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார்.
இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி(ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன்.
(ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது 'அல்லாஹ்வின் திருப்தியை நாடி 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை' என்று கூறினார்கள். 16
Volume :7 Book :81
6424. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :81
6425. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.
பனூ ஆமிர் இப்னு லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களை, ஜிஸ்யா(காப்பு) வரி வசூலித்துக் கொண்டு வரும்படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களான) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்கு அலா இப்னு அல்ஹள்ரமீ(ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா(ரலி) அவர்கள் (வரி வசூலித்துக்கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூ உபைதா(ரலி) அவர்கள் வந்துவிட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியான ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதருடன் அன்சாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள். தொழுகை முடிந்து நபி(ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தங்கள் எண்ணத்தை சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு 'அபூ உபைதா வந்துவிட்டார்; அவர் ஏதோ கொண்டு வந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்' என்றார்கள். அன்சாரிகள் 'ஆம், இறைத்தூதர் அவர்களே!' என்று பதிலளித்தார்கள். 'அவ்வாறாயின் ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்' என்று கூறிவிட்டு 'அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பிவிடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.17
Volume :7 Book :81
6426. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
ஒருநாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுகை நடத்துவதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழவைத்தார்கள். பிறகு சொற்பொழிவு (மிம்பர்) மேடைக்குத் திரும்பிவந்து 'உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது ('அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு 'பூமியின் கருவூலத் திறவுகோல்கள்' அல்லது 'பூமியின் திறவுகோல்கள்' வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணை வைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்' என்றார்கள்.18
Volume :7 Book :81
6427. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
(ஒருநாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) 'இறைவன் உங்களுக்காக வெளிக் கொணரும் பூமியின் வளங்களைத் தான் உங்களின் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்' என்றார்கள். 'பூமியின் வளங்கள் எவை?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் '(கனிமப் பொருள்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய இவ்வுலகக் கவர்ச்சிப் பொருள்கள் (தாம் அவை)' என்று பதிலளித்தார்கள். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் '(செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?' என்று வினவியதற்கு (பதிலளிக்காமல்) நபி(ஸல்) அவர்கள் மெளனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தம் நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் 'கேள்வி கேட்டவர் எங்கே?' என்று வினவினார்கள். அம்மனிதர் '(இதோ) நான் (இங்கிருக்கிறேன்)' என்று கூறினார். (அவர் கேள்வி கேட்டதையடுத்து மக்களுக்குப் பயனளிக்கும்) அந்த பதில் வெளிப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம்.
நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும் இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகிற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்று விடுகின்றன் அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது சூரியனை நோக்கி(ப் படுத்து)க் கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாம்) சாணமும் சிறுநீரும் வெளியேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.19
இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறவருக்கு அது நல்லுதவியாக அமையும். இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.20
Volume :7 Book :81
6428. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் (-மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.
-இதன் அறிவிப்பாளரான இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள் 'இதற்குப் பிறகு இரண்டாவது அல்லது மூன்றாவது தலை முறையினரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்களா என்று எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள்.
(தொடர்ந்து ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்')
இவர்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் சாட்சியமளிக்க தாமாக முன்வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும் கோரமாட்டார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கப்படாது. அவர்கள் நேர்த்திக்கடன் செய்வார்கள். ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள். (அதிகமாக உண்டு குடித்ததால்) பருமன் (தொந்தி) விழும் நிலை அவர்களிடையே தோன்றும்.
என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். 21
Volume :7 Book :81
6429. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். இவர்களுக்குப் பிறகு சில சமுதாயத்தார் வருவர். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியங்களையும் அவர்களின் சத்தியங்கள் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.22
Volume :7 Book :81
6430. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
கப்பாப் இப்னு அரத்(ரலி) அவர்கள் (கடும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காகத்) தம் வயிற்றில் ஏழு முறை சூடுபோட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டேன்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் மரணத்தை தடை விதித்திருக்காவிட்டால் மரணத்தை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். முஹம்மத்(ஸல்) அவர்களின் தோழர்கள் பலர் தம(து நன்மைகளு)க்கு இவ்வுலக வாழ்க்கை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திடாத நிலையில் (வாழ்ந்து) மறைந்துவிட்டார்கள். (ஆனால், அவர்களுக்குப் பின்) நாங்கள் (வீடு கட்ட) மண்ணுக்குச் செலவழிப்பதைத் தவிர வேறு தேவையே இல்லாத அளவுக்கு இவ்வுலக(ச் செல்வ)த்தைப் பெற்றுள்ளோம்.23
Volume :7 Book :81
6431. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் (ஒருமுறை) கப்பாப்(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தங்களின் (வீட்டுச்) சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: மறைந்துவிட்ட எம் தோழர்(கள் புரிந்த நன்மை)களை இவ்வுலக வார்க்கை எந்த வகையிலும் பாதித்துவிடவில்லை. (ஆனால்,) அவர்களுக்குப் பிறகு நாங்கள் (நிறைய) செல்வத்தைப் பெற்றுள்ளோம். (வீடு கட்டத் தேவைப்படும்) மண்ணைத் தவிர, அதைச் செலவழிக்க வேறு துறை எதையும் நாங்கள் காணவில்லை.