வெள்ளி, 31 டிசம்பர், 2010

முஸ்லிம்களுக்கும் புதுவருடப்பிறப்பு

இன்று உலக மக்களிடையே புதுவருடப்பிறப்பு என ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையிலான ஜனவரி மாதத்தின் முதல்நாள் பல்வேறு அனாச்சார களியாட்டங்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகின் அதிவேக வளர்ச்சியில் தங்களையும் பிணைத்துக் கொண்ட, இந்நவீன உலகின் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களும் அதேதினத்தை புதுவருடப்பிறப்பாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவதும், இஸ்லாமிய வருடப்பிறப்பான இச்சிறப்புமிகு முஹர்ரம் மாதத்தில் எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட ஆஷூரா தின நோன்புகளை நோற்காமல் அல்லது இம்மாதத்தின் மகத்துவத்தை உணராமல் ஏதோ கடமைக்காக செய்வதுபோல் நோன்பு வைப்பதும் எங்கும் பரவலாக இன்று காணமுடிகிறது.

இஸ்லாமிய சமூகத்தின் ஒரு பெரும்பகுதி ஒருபுறம் அன்னியக் கலாச்சாரத்தில் வீழ்ந்து இஸ்லாமியக் கலாச்சாரத்தை மறந்து கொண்டிருக்கும் அதேவேளை, இச்சமூகத்தின் மற்றொரு பெரும்பகுதியோ இஸ்லாம் வெறுக்கும் பல்வேறு அனாச்சார செயல்களில் தன்னை ஈடுபடுத்தி, மற்றவர்களின்முன் இறைவனின் உயர்ந்த வாழ்க்கை நெறியைக் கேலிக்குள்ளாக்கி வருகின்றது.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை மேற்கத்தியக் கலாச்சாரங்கள் கொள்ளைக் கொண்டு சென்று கொண்டிருக்கும் இந்நவீன காலகட்டத்தில் ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும், இஸ்லாமிய உலகை நோக்கி இழந்து போன தங்களின் கலாச்சாரத்தை மீண்டெடுக்க மௌன அழைப்பு விடுத்து அமைதியாக சென்று கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும் இஸ்லாமிய உலகிற்குப் புத்துணர்ச்சியைத் தந்து, வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கு பதில் எவ்வித உணர்வும் இன்றி அது சாதாரணமாகக் கடந்து செல்வதற்குக் காரணம் இம்முஸ்லிம் சமூகம் சங்கைமிக்க முஹர்ரம் மாதத்தின் மகத்துவத்தைச் சரியாக உணராததும், இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் பேணுவதன் கட்டாயத்தைச் சரிவர அறியாததுமாகும்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:

இம்முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானார் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும்.
முஹர்ரம் மாதத்திற்கென்று பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டாகும்.

1. இம்மாதம் இஸ்லாமிய வருடப்பிறப்பின் ஆரம்ப மாதமாகும்.

2. இம்மாதத்தின் 10ஆம் நாள் இறைத்தூதரான மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் சத்திய அழைப்பிற்கு செவிசாய்த்து, ஏகஇறைவன்மீது நம்பிக்கைக் கொண்ட சமூகத்தினரையும் (பனூ இஸ்ரவேலர்), அவர்களை அழித்தொழிக்கப் புறப்பட்ட ஃபிர்அவ்னிடமிருந்து வல்ல இறைவன் பாதுகாத்த நாளாகும்.

"ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.

மேற்கண்ட ஹதீஸில் இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதமாக நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் குறிப்பிடுகின்றார்கள். மட்டுமல்ல முஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் அனுசரிக்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபி (ஸல்) அவர்களால் இங்கு அடையாளப் படுத்தப்படுகிறது.

ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது ,(அதற்கு) "சென்ற வருடத்தின் பாவங்களுக்கு (அது)பரிகாரமாக அமையும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம்.

ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக விளங்கும் இந்த ஆஷூரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

"மூஸா (அலை) அவர்களைப் பெருமைப் படுத்துவதற்கு யூதர்களைவிட நான் அதிகத் தகுதி வாய்ந்தவன்" எனக் கூறி அவ்வருடம் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்ற நபி(ஸல்) அவர்கள், "எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.) எனக் கூறிச்சென்றாrகள்

இதன் அடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பை முஸ்லிம் உலகம் அனுஷ்டித்து வருகின்றது.
முஹர்ரம் மாதப் படிப்பினைகள்:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்து முஹர்ரம் 10 அன்று மட்டும் நோன்பு வைத்திருந்தாலும் அவர்களின் எண்ணத்திற்கியைந்து 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பு வைக்கும் முஸ்லிம் சமூகம் அதன் பின்னணியில் உள்ள நபி(ஸல்) அவர்களின் உறுதியான சமுதாய சிந்தனையைக் குறித்து ஆழமாகச் சிந்திப்பதில்லை.

நபி(ஸல்) அவர்கள், அடுத்த வருடம் தான் உயிருடன் இருப்பின் 9 அன்றும் நோன்பு வைப்பேன் என்று ஏன் கூறினார்கள்?

அதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் விரவிக் கிடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தெளிவான பதிலை தருகின்றன.

யூத சமுதாயம் என்பது உலகில் பல சமூகங்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கையை வைத்து மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களில் அதிமானோரையும் கொடூரமாக கொலை செய்தவர்கள் யூதர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக, இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர்.

இந்தக் காரணத்தினால் எப்பொழுதுமே தன்னுடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர்.

அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும் படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாகப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

அவற்றில் ஒன்றுதான் இந்த ஆஷூரா 9 ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்திலும் யூதர்களின் செயலுக்கு, தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி(ஸல்) அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களைவிட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 அன்றும் நோன்பு வைக்க விழைந்தார்கள்.

இவ்வாறு தனது ஒவ்வொரு அசைவிலும் மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் கவனமாக இருந்ததன் காரணம், இஸ்லாமியக் கலாச்சாரம் எவ்விதத்திலும் மற்ற கலாச்சாரங்களோடு ஒன்றி அழிந்து விடக்கூடாது; தனித்தன்மையும் திகழ வேண்டும் என்று கருதியேயாகும்.

ஆனால் இன்று நடப்பது என்ன?

பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் புதுவருடப்பிறப்பு எனில் அது ஜனவரி 1 தான்.
பெரும்பாலான முஸ்லிம்கள் தினசரி உபயோகிக்கும் நாள்காட்டியும் மாற்றார்களின் கடவுள்களை மகிமைப் படுத்தும் அல்லது நினைவு படுத்தும் முகமாகப் பெயரிடப்பட்ட கிழமைகளைக் கொண்ட நாட்காட்டிதான்.
பெரும்பாலான முஸ்லிம்கள் உடுத்தும் ஆடை முறையும் கரண்டைக்கு கீழே இழுபடும் அல்லது உடல் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான மேற்கத்திய ஆடைமுறைதான்.
ஷியா முஸ்லிம்கள் இறந்தவர்களை நினைவு கூரும் முறையும், மாற்றார்கள் தன்னிலை மறந்து தரையில் விழுந்து அழுது புரண்டு தங்களது அங்கங்களையே காயப்படுத்திக் கொள்ளும் "பஞ்சா" போன்ற முறைகள்தாம்.
இன்னும் அடுக்கிக் கொள்ள இச்சமுதாயத்தில் அனாச்சார விஷயங்கள் எண்ணற்று மலிந்து நிறைந்துள்ளன.

இவ்விதம் அனாச்சாரங்களின் கூடாரமாக கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு முஹர்ரம் மாதத் துவக்கம் தரும் மகத்தான மற்றொரு சிந்தனை என்ன?

முஹர்ரம் மாதம் இஸ்லாமிய வருடத்தின் ஆரம்ப மாதம் என்பதோடு நிற்காமல் சற்று அதன் ஆழத்திற்கு இறங்கிச் சென்றால் புதுவருடம் தரும் மகத்தான சிந்தனையை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

இறைவன் நாடினால் தொடரும்..

ஆக்கம்: முன்னா

வியாழன், 30 டிசம்பர், 2010

கடன்படுவோர் கவனத்திற்கு..

அன்பான முஸ்லிம் சகோதர சகோதரிகளே... முஸ்லிம் உம்மத்தைப் பொருத்தவரை அவர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளைப் போன்றவர்கள்.

'இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே' என்கிறான் இறைவன். (அல் குர்ஆன்)

சகோதரத்துவம் என்பது வெறும் சித்தாந்தமாக பேசப்பட வேண்டிய கொள்கையல்ல. அது இதயத்தாலும், உணர்வுகளாலும் பிணைந்திருக்க வேண்டிய உறவாகும். ஆனால் இன்றைக்கு இந்த உறவு முறை பெரும்பாலானவர்களிடத்தில் எப்படி இருக்கிறதென்றால் திருமணம் போன்ற சந்தோஷமான நேரங்களில் கூடி மகிழ்ந்து விட்டு செல்வதும் மரணத்திற்கு வந்து சோகமாக இருந்து விட்டுப் போவதுமாகத்தான் இருக்கிறது.

பிறருடைய துன்பங்களில் பங்கெடுக்கும் போக்கு வெகுவாக குறைந்துப் போன சூழலே நிலவுகிறது. முஸ்லிம்களுக்கு இது ஆரோக்யமான நிலையல்ல. ஏனெனில் முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய பண்புகளை இஸ்லாம் வெகுவாக சுட்டிக் காட்டி அது பிரதிபலிக்கும் முஸ்லிமை அது விரும்புகிறது. நல்ல பண்புகளைக் கொண்டுள்ள முஸ்லிமிற்கு இறைவனிடம் கிடைக்கவிருக்கும் வெகுமதிகளை குர்ஆன் நிறைய இடங்களில் எடுத்துக் காட்டுகிறது. சகோதரத்துவத்தின் அடையாளங்களில் ஒன்றாக இஸ்லாம் கூறும் பண்புதான் கட்டுரையின் தலைப்பு.

கடன் மனிதனை நிம்மதியற்ற நிலையில் உழல செய்யும் ஒரு சுமையாகும்.

ஒருவன் பட்டினி கிடக்கிறான் என்றால் அது அனது உடலை பாதிக்கும், வலிமையை குறைக்கும். ஆனால் அவன் உள்ளத்தால் எத்தகைய பாதிப்பும் அடையமாட்டான். ஒரு வேளை இல்லையென்றால் அடுத்த வேளை அவனுக்கு உணவு கிடைத்து விடும். அவன் ஆரோக்ய நிலையைப் பெற்று விடுவான்.

ஆனால் கடன்? அது தனிமனிதனோடு முடியும் பிரச்சனையல்ல. அவன் பாதிக்கப்படுவான். அந்த பாதிப்பு உலவியல் ரீதியாக நிகழ்வதால் மனம் உடல் என்று ஒருங்கிணைந்து பாதிப்பின் தாக்கம் விரியும். அவனை சார்ந்தோரும் பாதிக்கப்படுவார்கள். குடும்பம் இருந்தால் மனைவி - குழந்தைகள் என்று ஒட்டு மொத்த குடும்பத்தையும் அது பாதிக்கும்.

கடனை அடைக்க முடியாத சூழ்நிலை வரும் போது கண்டபடியான பேச்சுக்கும் செவி கொடுக்க வேண்டிய நிலை முதலில் உருவாகி பின்னர் அது மானத்தையும் இறுதியில் உயிரையும் கூட வாங்கி விடும்.

கடன் சுமை அழுத்தும் போது ஒண்டி இருக்கும் வீடு வாசல் கையை விட்டுப் போகும். கடனை அடைக்க முடியாத பட்சத்தில் குடும்பத்தோடு மடிவது தான் நல்லது என்ற படு பயங்கர நிலைக்குத் தள்ளப்பட்டு அது நடந்து விடும்.

இன்றைக்கு வரும் 'குடும்பத்துடன் தற்கொலை' என்ற செய்திகள் நூறு சதவிகிதம் கடன் சுமையின் பரிசேயாகும்.

கடன் சுமையால் இந்த உலகில் மட்டும் தான் இழிவு என்று நினைத்து விடக் கூடாது. இது தீர்ப்பு நாள் வரைத் தொடரும் இழிவாகும்.

இறைவனின் பாதையில் அவனுக்காக போரிட்டு கொல்லப்பட்டவர்கள் என்ன பாவம் செய்திருந்தாலும் அது மன்னிக்கப்படும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. ஏனெனில் அவன் செய்த பாவங்களை விட அவன் செய்துள்ள தியாகம் மகத்தானது. ஆம் இறைவனுக்காக உயிரை விடும் அந்த தியகத்திற்கு ஈடு எதுவுமில்லை. அவர்களின் உயிரு பரிக்கப்பட்ட உடனே அது சொர்க்கத்தில் நுழைந்து விடும் என்ற நற்செய்தியெல்லாம் குர்ஆனிலும் சுன்னாவிலும் இருக்கின்றது. இத்துனை சிறப்புக்குரியதாக வீர மரணம் இருந்த போதும் வீர மரணத்தால் ஏற்படும் செர்க்க வாழ்வை 'கடன்' தடுத்து விடும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

'உயிர் தியாகிகளின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும் கடனைத் தவிர' என்பது நபிமொழி. அவனது கடனுக்கு பிறர் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்றால் இத்துனைப் பெரிய தியாகம் செய்தும் அதன் பலனை அனுபவிக்க முடியாத பரிதாபமான சூழ்நிலை உருவாகி விடும்.

'நபி(ஸல்) அவர்களிடம் ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. இவர் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டுமா என்று நபி(ஸல்) கேட்டர்கள். 'ஆம்' என்று பதிலளிக்கப்பட்டது. உடனே நபி(ஸல்) தாம் ஜனாஸா தொழுகையை நடத்தாமல் ' உங்கள் சகோதரருக்கு தொழவையுங்கள்' என்று கூறி நகர்ந்து விட்டார்கள் என்ற செய்தி பல நபித் தோழர்கள் வழியாக பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமிய அரசாங்கம் இருந்து அங்கு இறைவனின் கலீஃபா (இறைவனின் ஆட்சியாளர்) ஆட்சிப் புரிந்தால் அவருக்கு கீழ் இருக்கும் முஸ்லிம் குடி மகன் கடன் பட்டு விட்டு அடைக்க முடியாமல் இறந்தால் அதை அடைக்கும் பொறுப்பை அந்த ஆட்சியாளர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

''இறை நம்பிக்கையாளனின் உயிர் (அவன் கடன்பட்டவனாக இருப்பின்) அவனுடைய கடன் அடைக்கப்படும் வரை அதனுடன் தொங்கிக் கொண்டிருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், திர்மிதீ

இறை ஆட்சியாளர்கள் இல்லாத பூமியில் கடன் சுமையால் அவதிப்படும் நம் சகோதரர்களுக்கு நாம் தான் கை கொடுக்க வேண்டும்.

கடன்காரர்களின் கடனையெல்லாம் நாம் அடைத்துக் கொண்டிருந்தால் இறுதியில் நாம் கடன் படும் நிலைத்தான் உருவாகும் என்று கிண்டலாக வெறும் சித்தாந்தம் பேசிக் கொண்டிருக்கும் நிலைக்கு நாம் அடிமைப்பட்டு விடக்கூடாது.

கடன் படும் அனைத்து முஸ்லிம்களுடைய கடனையும் செல்வந்தர்கள் அடைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை.

வசதி வாய்ப்பும் - பெருந்தன்மை மிக்க உள்ளமும் உள்ளவர்கள் கடனாளிகளின் சூழ்நிலையை அறிந்து அவர்களுக்கு அவசாகம் அளிப்பதோ அடைக்க முடியாத சூழ்நிலை வரும் போது அவரது கடனை தள்ளுப்படி செய்வதோ எத்தகைய பலனை ஏற்படுத்தும் என்பதை கீழுள்ள நபிமொழி தெளிவுப்படுத்துகிறது.

ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்'' என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி - 2391)

செல்வந்தர்களின் செல்வத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் 'ஜகாத்' நிதியை கடனுக்காக (கடன் காரர்களின் கடனை அடைக்க) செலவிட வேண்டும் என்று இறைவன் கூறுகிறான்.

நிச்சயமாக ஜகாத் என்பது பரம ஏழைகளுக்கும் - ஏழைகளுக்கும் - கடன்பட்டுள்ளவர்களுக்கும்...... உரியதாகும். (அல் - குர்ஆன் 9:60)

நம் செல்வத்தின் மீது வந்து விழும் கடன் சுமையான ஜகாத்தை நாம் வருடந்தோரும் பிரித்தெடுக்க வேண்டும். உரியவர்களுக்கு அதை கொடுத்தாக வேண்டும். இல்லையெனில் செல்வந்தர்களாக இருந்தும் மரணத்திற்கு பிறகு கடனாளிகளாக இறைவனை சந்திக்கும் நிலை ஏற்படும்.

இந்த வருடம் ரமளானை சந்திக்கப் போகிறோம். நன்மைகளுக்குரிய பலன்களை அள்ளி வழங்குகிற மாதம். இதில் கடனாளியின் கண்ணீர் துடைத்தால் அதன் பலன்கள் பலமடங்காக இறைவன் புறத்திலிருந்த நமக்கு கிடைக்கும்.

அரபுநாடுகளில் - ஐரோப்பிய நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் இந்த வருட ஜகாத்தை கடனாளிகளின் நல்வாழ்விற்கு செலவிட முடிவு செய்யுங்கள். இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் நிம்மதியும் பிரார்த்தனையும் உங்களை அனேக வழிகளில் உயர்த்தி வைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

கடன்படுவோர் கவனத்திற்கு..

கொடுப்பதற்கு செல்வந்தர்கள் இருக்கிறார்கள் அதனால் கடன் பட்டுக்கொண்டே இருப்போம் என்று முடிவு செய்யாதீர்கள். 'திருப்பி அடைக்க வேண்டும் என்ற நிலையில் பெறப்படும் எதுவும் பெறுபவருக்கு சுமையாக அமைந்து விடும். அடைக்க வேண்டும் என்கிற எண்ணமில்லாமல் பேருக்காக கடன் என்று எதையும் பெறாதீர்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, 'இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பத் தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்' என்று பதிலளித்தார்கள். (ஆய்ஷா(ரலி) புகாரி - 2397)

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (2387)

செல்வந்தர்களை இறைவன் நாடி கடன்கள் அடைக்கப்பட்டால் மீண்டும் கடன்படும் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை உணர்வுத்தேவை என்பதை கவனத்தில் வையுங்கள்.

செவ்வாய், 28 டிசம்பர், 2010

வட்டியை ஒரு தீமையாகவே கருதுவதில்லை.

இன்றைய உலகில் பணம் அதிகமாக சேர்க்கவேண்டும் என்ற பேராசையால் பல தீமைகள் மனித வர்க்கத்தால் தீமை என்றே உணரப்படவில்லை. இவற்றில் சினிமா, வட்டி, வரதட்சனை போன்றவை முதலிடம் வகிக்கின்றன. இன்னும் சில தீமைகள் தீமை என்று தெளிவாக அறிந்தும் பணத்தின் மீதுள்ள பேராசையால் அரசாங்கமே அத்தீமைகளை அங்கீகாரம் செய்துள்ளது. அவற்றுள் முக்கியமானவை லாட்டரி, குதிரைப் பந்தயம், விபச்சாரம், குடி போன்றவையாகும். இத்தகைய அரசாங்கத்திற்கு சமூக நலனைவிட பணமே பெரிதாகத் தெரிகின்றது.

தனி மனிதன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அது குற்றம், ஆனால் அரசாங்கமே அதை லாட்டரி, குதிரைப் பந்தயம் என்ற பெயரில் செய்தால் அது குற்றமில்லை. இரட்டை வேடம் குளறுபடி ஆகியவற்றின் மொத்த உருவமே இன்றைய அரசாங்கம்.

அரசாங்கமும் தனிமனிதனும் வட்டியை ஒரு தீமையாகவே கருதுவதில்லை. ஆனால் சமுதாயத்தில் இது எவ்வளவு பெரிய சுயநலவாதிகளையும், பேராசைக்காரர்களையும், சகோதர மனப்பான்மை அற்றவர்களையும், பொருளாதார வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை யாரும் உணருவதில்லை ஏன்? அரசாங்கத்திற்கும் இது மிகப்பெரிய இழப்பாகும்.

இத்தகைய சமுதாயத் தீமையாகிய வட்டியை விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் விலகாமல் இருப்பது மிகவும் வேதனைக்குறியதே. இதற்கு முக்கிய காரணம் பலர் இதை ஒரு பெரும் பாவமாகக் கருதவில்லை என்பதேயாகும். ஆனால் இறைமறையும், நபி மொழியும் இதை மிகப்பெரும் பாவமாகக் கருதி மனித குலத்தை எச்சரிப்பதை பாருங்கள்.

ஒட்டுமொத்தமாக எல்லா வட்டியும் ஹராம் என்று கூறும் வசனம்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً وَاتَّقُواْ اللّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

ஈமான் கொண்டோரை! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக்கொண்டால்) வெற்றியடைவீர்கள். (3:130)

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُواْ إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىَ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللّهِ وَمَنْ عَادَ فَأُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

யார் வட்டி(வாங்கித்) தின்றார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழமாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைத் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:275)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையான மூஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள். (2:278)

فَإِن لَّمْ تَفْعَلُواْ فَأْذَنُواْ بِحَرْبٍ مِّنَ اللّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُؤُوسُ أَمْوَالِكُمْ لاَ تَظْلِمُونَ وَلاَ تُظْلَمُونَ

இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2:279)

உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிய துணிவானா என்பதை வட்டி தொழில் செய்யும் முஸ்லிம்கள் உணர்வார்களா? உணர்ந்து விட்டால் அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.

மேலும் பலர் வட்டியும், வியாபரமும் ஒன்றுதான் என்றும் திருமறையில் வட்டியைப்பற்றி கூறிய வசனம் இக்காலத்திற்கு பொருந்தாது. அது அன்றைய நிலையில் உள்ள கொடும் வட்டியைத்தான் குறிக்கும். அதுவும் இரட்டிப்பு (கூட்டு) வட்டிதான் தடை செய்யப்பட்டுள்ளது என்று பணத்தின் மீது கொண்ட பேராசையால் தாமாகவே தாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். இன்னும் சிலர் வட்டி வாங்குவது தான் பாவம். கொடுப்பது பாவமில்லை என்றும் வட்டியை அடிப்படையாகக் கொண்ட வங்கியில் வேலை செய்வது கூடும் என்றெல்லாம் கருதுகின்றனர்.

வட்டி வங்குவது, வட்டி கொடுப்பது, வட்டிக் கணக்கை எழுதுவது வட்டியின் சாட்சிகள் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவரே. அறிவிப்பாளர்: ஜாபிர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம், திர்மிதீ, முஸ்னத் அஹ்மத்

இறைவன் நான்கு பேர்களை சுவர்க்கத்திற்கோ அல்லது அதனுடைய சுகத்தை அனுபவிப்பதற்கோ விட மாட்டான். அவர்கள்

1. குடிப்பதை வழமையாகக் கொண்டவர்கள்.

2. வட்டி வாங்கித் தின்றவர்கள்.

3. அநாதைகளின் சொத்தை அநியாயமாக அபகரித்தவர்கள்.

4. பெற்றோரைத் துன்புறுத்தியவர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: ஹாக்கிம்)

வட்டி என்றால் என்ன?

بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் மனிதர்களுக்கு அருளப்பட்டதை (நபியே!) நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (16:44)

மேலே உள்ள இறைவசனத்தின் மூலம் குர்ஆனில் வரும் வட்டிக்கு விளக்கம் தர அங்கீகாரம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் அதைப்பற்றி கூறுவதை கீழே காண்போம். பலவித கொடுக்கல் வாங்கலில் நபி(ஸல்) அவர்கள் இவையெல்லாம் கூடும், இவையெல்லாம் வட்டி (ஹராம்) கூடாது என்று கூறியுள்ளதால் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகாமல் எல்லா ஹதீஸ்களையும் கருத்தில் கொண்டு அதைப்பற்றி அறிய முற்படவேண்டும்.

வட்டி எல்லாம் தவணை முறையில்தான். கைக்குகை மாற்றும் பொருட்களில் வட்டி இல்லை. (உஸாமத்துபின் ஜைத் (ரழ) நூல்: புகாரி, முஸ்லிம்

தங்கத்தை தங்கத்திற்கு பதிலாகவும், வெள்ளியை வெள்ளிக்கு பதிலாகவும், மணிக்கோதுமையை மணிக்கோதுமைக்கு பதிலாகவும், தொலிக்கோதுமையை தொலிக்கோதுமைக்கு பதிலாகவும், பேரிச்சம் பழத்தை பேரிச்சம் பழத்திற்கு பதிலாகவும், உப்பை உப்பிற்கு பதிலாகவும் சம எடையில், சம தரத்தில், கரத்திற்கு கரம் விற்றுக்கொள்ளுங்கள். இவ்வினங்கள் பேதப்படுமானால் கரத்திற்கு கரம் நீங்கள் விரும்பிய பிரகாரம் விற்றுக் கொள்ளுங்கள். எவர் கூடுதலாகக் கொடுக்கவோ அல்லது கூடுதலாக வாங்கவோ செய்த போதினும் அது வட்டியாகும். விற்பவரும் வாங்குபவரும் சமமானவரே. (உபாதாத்துப்னிஸ்ஸாமித் நூல்: முஸ்லிம், திர்மிதி)

நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரழி) அவர்கள் பர்னீ வகையைச் சார்ந்த பேரீச்சம் பழத்தை கொண்டு வந்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இது உமக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று வினவினர். அதற்கு அவர்கள் என்னிடம் தரத்தில் குறைந்த பேரிச்சம் பழம் இருந்தது. அதில் நான் இரண்டு மரக்கால் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக ஒரு மரக்கால் பர்னீ பேரிச்சம்பழம் வாங்கினேன் என்றார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் ஆ! இது வெளிப்படையான வட்டி முழுக்க முழுக்க வட்டி, இவ்வாறு செய்யாதீர், இவ்வாறு நீர் செய்ய நாடினால் முதலில் (உமது) பேரிச்சம் பழத்தை விற்றுவிட்டு பின்னர் இதனை வாங்கிக் கொள்வீராக! என்று கூறினார்கள். (அபூ ஸயீது நூல்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக வட்டிப் பொருள் வளர்ந்த போதிலும், உண்மையில் அதன் இறுதிப் பலன் நாசம்தான். (இப்னுமஸ்ஊத் (ரழி). திர்மிதி, நஸயீ)

வட்டித்தொழில் செய்து சாப்பிட்டவர் மறுமையில் தட்டழிந்து தடுமாறும் பைத்தியக்காரராகவே எழுப்பப்படுவார். (இப்னு அப்பாஸ் (ரழி). இப்னு அபீஹாத்திம் )

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா? ஹராமானதா? முறையானதா? முறையற்றதா? என்பனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர். (அபூஹுரைரா (ரழி) புகாரி)

வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்(ரழி) ஆதாரம்:முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

இத்தகைய பெரும்பாவமான வட்டியிலுருந்து விலகி இன்றைய உலகில் நாம் வாழமுடியாது. அப்படி வாழமுற்பட்டால் நாமும் நமது சமுதாயமும் மிகப்பெரும் பொருளாதர வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்று அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் அல்லாஹ்வும் அவனது தூதரின் வாக்கும் எக்காலத்திலும் பொய்யாகாது.

يَمْحَقُ اللّهُ الْرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ அல்லாஹ் வட்டியை (எந்த பரகத்தும் இல்லாமல்) அழித்து விடுவான். இன்னும் தான தர்மங்களை பெருகச் செய்வான். (2:276)

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: இறைவன் எனது உள்ளத்தில் போட்டான். நிச்சயமாக எந்த நபரும் அவரது ரிஜ்கு முடியாதவரை ஒருபோதும் மரணிக்க முடியாது. ஆகவே, அல்லாஹ்வை பயந்து ரிஜ்கை சம்பாதிக்கும் வகையில் ஹலாலான (ஆகுமான) சிறந்த முறையைக் கடைபிடிப்பீர்களாக! (இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: பைஹகீ, ஸ்ரஹுஸ்ஸுன்னா)

எனவே நாம் எவ்வளவு அதிகமாக கஷ்டப்பட்டு உழைத்தாலும், இறைவனால் நமக்கு அளித்த ரிஜ்க்கு மேல் அடைய முடியாது. அடையுமுன் யாரும் மரணிக்க முடியாது. ஆகவே வட்டி என்ற ஹராமை தவிர்த்து ஹலாலான வழியிலேயே முயற்சி செய்வோம். நமக்குள்ள ரிஜ்க்கு நம்மை வந்தே அடையும் என்ற நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் உறுதிகொண்டு உழைப்போமாக.

திங்கள், 27 டிசம்பர், 2010

அவ்லியாக்களை அழைத்து அபயம் கோருகிறார்கள்!


S. கமாலுத்தீன்

இப்போது நமது சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் புரிந்துவரும் செயல்களை சிறிது சிந்தித்துப் பாருங்கள்! இறந்தவர்கள அழைத்து உதவி தேடுகிறாாகள்! கப்ருகளுக்குச் சென்று அழுது மன்றாடி கஷ்டங்களைப் போக்க வேண்டுகிறார்கள்! தங்கள் கஷ்டங்கள் நீங்க, கபுரடியில் குறிப்பிட்ட நாட்கள் தங்குகிறார்கள்! இறந்த அவ்லியாக்களை அழைத்து அபயம் கோருகிறார்கள்! “எதிரிகள் எங்களைத் தாக்கி விடாமலிருக்க உதவுங்கள்” என்று கபுரில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்களிடம் வேண்டுகிறார்கள்! “யாஸாஹிபன்னாஹுரி குன்லி நாஸரீ” – நாகூர் ஸாஹிபே! எனக்கு உதவுங்கள்! என்ற பொருள் கொண்ட பாடல்களைப் படிக்கிறார்கள்!

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டப்பட்டு கூறப்பட்டுள்ள “என்னை ஆயிரம் தடவை இருட்டறையிலிருந்து அழைக்கக் கூடியவனுக்கு ஹாலிராகி உதவுகிறேன்” என்ற பொருள் கொண்ட “யாகுத்பா” என்ற கவிதையைப் பாடுகின்றார்கள். மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவர்களை இருட்டறையிலிருந்து ஆயிரம் தடவை அழைக்கிறாாகள்! இவ்வாறு அழைக்கும் போது அவர் விஜயம் செய்து, இவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக நம்புகிறார்கள்! குழந்தை பெறும்போதும், கஸ்ட நேரத்திலும் “யாமுஹ்யித்தீனே! என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று கூறுகிறார்கள். எனக்கு நோய் குணமானால் இந்த வலியுல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிடுவேன்” என்று வேண்டுகிறார்கள். சில நேரங்களில் அதனை செய்தும் விடுகிறார்கள்.

இவைகள் எல்லாம் ஷிர்கான செயல்களாகும். இதுபோன்ற நம்பிக்கை உடையவர்களே நிச்சயமாக இணை ைவப்பவர்களாவார்கள். இந்தத் தவறான நம்பிக்கை கொண்டவர்களின் அமல்கள் அனைத்தையும் அல்லாஹ் பயனற்றதாக ஆக்கிவிடுகிறான். இவர்கள் இந்தத் தவறான நம்பிக்ைகயிலிருந்து விலகி, உலகில் வாழும்போதே தவ்பா செய்யவில்லையானால், மறுமையில் அவர்களுக்கு மன்னிப்பே இல்லை. நிரந்தர நரகத்தையே அடைவார்கள்.

இணைவைத்தலின் தீய விளைவுகள்

அவர்களின் நல்ல அமல்கள் பயனற்றதாகிவிடும் என்று நாமாகக் கூறவில்லை. அல்லாஹ் தன் திருமறையில் அவ்வாறுதான் குறிப்பிடுகின்றான்.

“பின்னர் அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழிந்து விடும்! (அல்குர்ஆன் 6 : 88)

மூமினாக, ஏக இறை நம்பிக்கை உடையவனாக, ஷிர்கானன எந்த செயலும் செய்யாமல் உலகில் வாழ்ந்தவன் – வேறு ஏதேனும் குற்றங்கள் புரிந்து, அதற்கு உலகிலேயே பாவ மன்னிப்புத் தேடாமல் மரணித்து விட்டால், அல்லாஹ் அவனை மன்னித்தும் விடலாம். தண்டிக்கவும் செய்யலாம். அப்படியே அல்லாஹ் அவனைத் தண்டிக்கும்போது நரகத்தில் நிரந்தரமாக அவனை வைப்பதில்லை.

“அல்லாஹ் தனக்கு (எதனையும்) இணையாக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். (இணைவைத்தல் அல்லாத) மற்றவைகளை, தான் நாடியவர்களுக்கு மன்னிக்கின்றான். (அல்குர்ஆன் 4 : 116)

ஏக தெய்வ நம்பிக்கை உடையவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்காதவர்கள், மற்ற தவறுகள் புரிந்திருப்பின் இறுதிக் கட்டத்திலாவது சுவர்க்கத்தில் நுழைவார்கள். ஆனால் ஷிர்கான நம்பிக்கை உள்ளவர்கள் சுவர்க்கத்தின் வாடையைக் கூட பெற முடியாது. அல்லாஹ் சுவர்க்கத்தை அவாகள் மீது ஹராமாக்கி விட்டான்.

அல்லாஹ்வின் அடியார்களில் யார் எதனையும் அவனுக்கு இணையாக்கவில்லையோ, அவரைத் தண்டிக்காமலிருப்பதை அல்லாஹ் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

சிறிது சிந்தித்துப் பாருங்கள்! ஷிர்கான காரியங்கள் புரிவோரின் முடிவு எவ்வளவு பயங்கரமானது என்று எண்ணிப் பாருங்கள். இறைவன் ஷிர்கை எவ்வளவு வெறுக்கிறான் என்பதையும் உணர்ந்து பாருங்கள். “நாம் ஷிர்கான காரியங்களைச் செய்யாமலிருப்பதில் எவ்வளவு எச்சரிக்கையுடனிருக்க வேண்டும்” என்பதை நீங்களே முடிவு செய்து ெகாள்ளுங்கள்.

பொருளற்ற வாதம்

ஷிர்கான செயல்களைச் செய்து வருவோரிடம் “ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே முரணானதாயிற்றே?” என்று நாம் கேட்கும் போது, “நாங்கள் அழைத்துவரும் அவ்லியாக்களை தெய்வமாகவா நாங்கள் கருதுகிறோம்? அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்குமாறும், அல்லாஹ்விடம் பெற்றுத் தருமாறும் தானே வேண்டுகிறோம்! இது எப்படி ஷிர்காகும்?” என்று கேட்கின்றனர். அந்தோ பரிதாபம்! இவர்கள் அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் அல்லாஹ்வை கொடுங்கோல் மன்னனுக்கன்றோ ஒப்பிட்டு விட்டார்கள்! அல்லாஹ் மிக நேர்மையானவன், அவன் அடியார்கள் மீது மிகவும் இரக்கம் கொண்டவன். தன் அடியார்கள் அனைவரின் அழைப்பையும் ஒரே நேரத்தில் செவி மடுக்கிறான். அத்தனையையும் ஒரே நேரத்தில் நிவர்த்திக்கவும் செய்கிறான். இன்னொருவர் மூலம் அடியார்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை, இன்னொருவர் சொல்லிக் கொடுத்துத் தெரிந்து கொள்ள அவன் அறியாதவனுமில்லை. அந்த இன்னொருவர் அவனை விட இரக்கம் கொண்டவருமில்லை

ஒர தமிழ் எழுத்தாளர் தன் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்:-

அவ்லியாக்களை அல்லாஹ்விடம் நமக்காக பரிந்து பேசுகின்ற வக்கீல்களாக கருதிக் கொண்டு, நாம் எவ்வளவு பெரிய அறிவிலிகள் என்பதையல்லவா வெளிப் படுத்துகின்ேறாம்! அல்லாஹ் எல்லாம் அறிந்தவன், மையிருட்டில் நடமாடும் கறுப்பு எறும்பின் காலடி ஓசைகளையும் நன்கு அறிந்தவன். எல்லோருடைய உள்ளக் கிளர்ச்சிகளையும் உணர்பவன். அத்தகைய ஆற்றலுள்ளவனை ஒரு சாதாரண நீதிபதியுடன் ஒப்பிட்டு பேச முடியுமா? உலகிலுள்ள நீதிபதிக்கு ஒரு மனிதனின் உள்ளக்கிடக்கையை உணரும் சக்தி இல்லை. அதற்காக வக்கீல்கள் தேவைப்படுவது இயற்கை. அந்த வக்கீல்கள், தமது கட்சிக்காரனின் வாதங்களை பக்குவமாக நிதிபதியிடம் எடுத்துக் கூறுவாாகள். உலக நீதிபதிகள், வக்கீல்கள் சாதுர்யப் பேச்சினால் பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் நம்பி தீர்ப்புக் கூற சந்தர்ப்பமுண்டு. இதுபோல நாம் நினைக்கிறபடி இந்த அவ்லியா வக்கீல்கள் அல்லாஹ்விடம் வாதாடி, நமது அயோக்கிய தனங்களையெல்லாம், அப்பழுக்கற்றவை என்று அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டி நமது கட்சியை ஜெயிக்கச் செய்து விடுவார்களா? எந்தக் கணிப்பிலே நாம் அவ்லியாக்களை நமது வக்கீல்களாக மாற்றி அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யத் துணிகிறோம்?

சனி, 25 டிசம்பர், 2010

வாழ்வை சீரழிக்கும் வரதட்சணை

வாழ்வை சீரழிக்கும் வரதட்சணை

இன்று மனித குலத்தை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் ஏராளம் ஏராளம். ஏழ்மை, பசி, பிணி, பணத்தாசை பதவிப்பித்து, லஞ்ச லாவண்யம், ஊழல், இனவெறி, நிறவெறி, மொழிவெறி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த வரதட்சணை. இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இது அவாளின் அன்பளிப்பு. இது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் தமிழக முஸ்லிம்களை கடிக்க வந்திருக்கும் நச்சுவரம். இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அறியாமைக்கால அரேபியர்களிடம் நிலவிய சில நடைமுறை பழக்க வழக்கங்களை இஸ்லாமிய நெறிமுறைகளாக அங்கீகரித்தார்கள். உதாரணத்திற்கு மிஸ்வாக் செய்தல், கத்னா செய்தல் போன்றவற்றை கூறலாம். அவை மனிதனுக்கு நன்மை பயக்கும் நற்பழக்கங்கள் என்பதால் அவற்றை இஸ்லாத்தில் சுவீகரித்துக் கொண்டார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டல்லவா? அந்த அடிப்படையில் அப்படிப்பட்ட நற்செயலில் ஒன்றானதா இந்த வரதட்சனை? இல்லையே! பின் எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?

அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி(ஸல்) அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?

ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக வரதட்சணை என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்? குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்? உடன் பிறந்த சகோதரிகளை ‘கரை’ ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்? கல்யாணம் என்பதே கானல் நீராகி கண்ணீர் சிந்தி நிற்கும் கன்னியர் எத்தனை பேர்? வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?

அறியாமைக் கால அரேபியர்களாவது பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். நவீன காலத்தில் வரதட்சணைக்கு பயந்து வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து பெண் என்று தெரிந்தாலே கருவறையை கல்லறையாக்கி விடுகின்றனர். இதையும் மீறி பிறக்கும் பெண் சிசுக்களுக்கு இருக்கவே இருக்கிறது கள்ளிப்பாலும், நெல்மணியும் இதுதான் 21ம் நூற்றாண்டின் நாகரீகம்.“அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாக) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வெறெதற்கும் அஞ்சாதவர்களே என குர்ஆன் கூறுகிறது. (அல்குர்ஆன் 9:18)

இதில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் “வாங்குகின்ற வரதட்சணையை வாங்கிக் கொள்ளுங்கள் கவலையில்லை, பள்ளிவாசலுக்கு செலுத்தவேண்டிய கமிஷனை கொடுத்து விடுங்கள் என்று நிர்வாகிகளும் ஜமாஅத்துகளும் தங்களுடைய கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்.

இத்தகைய தகுதி படைத்தவர்களா தமிழகத்தின் பெரும்பான்மை பள்ளிகளை பரிபாலனம் செய்து வருகின்றனர்? அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாக இருந்தால் தானே பள்ளிவாசலின் வருமானத்திற்கென வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள்.

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். (4:4) என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும் அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா? ஜம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மணப்பெண்ணிடம் வரதட்சணை வாங்கிக்கொண்டு அதிலிருந்து சிறு அற்ப தொகை 1001 ரூபாயை மணபெண்ணுக்கு மஹராக வழங்கி மணமுடிக்கும் மகா கெட்டிகாரர்கள் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். ‘மஹர் வழங்கி மண முடியுங்கள்” என்ற மறை மொழியை அப்படியே பின்பற்றுகிறார்களாம்! அல்லாஹ்வை எமாற்ற நினைக்கும் இந்த அயோக்கியர்கள்.

அல்லாஹ்வின் தூதர் எதை உங்களிடம் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள், இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் (59:7)

அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் (33:36)

மேற்கண்ட இறைவசனங்களின் படி நிராகரித்து வழிகேட்டிலும் குஃப்ரிலும் விழுந்து நாசமாவதா? என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ஒருத்தியை வாழ வைக்க ஒரு குடும்பத்தையே வறுமையிலும் கடன் தொல்லையிலும் தள்ளிவிடுவது என்ன நீதி? தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு அறிவிலி தொடங்கி வைத்த இந்த தீமை இப்போது காட்டுத்தீயாக பரவி பெரும் நாசம் விளைவித்து வருகின்றது.

“ஜந்தாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி” இது முதுமொழி. இப்போது “ஒரே ஒரு பெண் பிறந்தால் அவனும் ஓட்டாண்டி” இது புதுமொழி.

வசதிப்படைத்த பெண்ணின் பெற்றோர் சிலர் தங்களின் மகளுக்கு மனமுவந்து அன்பளிப்பாக வழங்குவதை நாம் குறைகூற இயலாது. அதை திருமணத்தன்று செய்யாமல் பிரிதொரு சமயத்தில் மணமக்களுக்கு செய்யலாமே! திருமணத்தன்று பலர் முன்னிலையில் இப்படி செய்வது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அல்லவா அமைந்து விடுகிறது. இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்? எனவே எக்கோணத்திலிருந்து பார்த்தாலும் இவ்வரதட்சணை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு கொடிய தீமையே என்பது மறுக்க முடியாத உண்மை.

இத்தீமையை ஒழிக்க அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே விட்டுச் சென்ற குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவது ஒன்றுதான் ஒரே வழி. நம் சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் கட்டுப்பட்டு நடப்பது என்ற திடமான உறுதியான முடிவை மணமக்களும், பெற்றோர்களும், ஜாமாஅத்தார்களும் மேற்கொண்டு நடைமுறைக்கு கொண்டு வருவோமேயானால் வரதட்சணை என்ன – மனிதனை வாட்டி வதைக்கும் அத்தனை தீமைகளுக்கும் நாம் சமாதி கட்டிவிடலாம்.

இறைவன் தன் திருமறையில் “விசுவாசிகளே நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்” என்று கூறுகின்றான். அத்துடன் நம் சந்ததிகளையும் பிள்ளை பிராயம் முதல் இஸ்லாமிய நெறியில் வளர்த்திடல் வேண்டும். அப்போதுதான் அடுத்த தலை முறையாவது வரதட்சணையைப் பற்றி எண்ணிப்பார்க்காது மேலும் திருமணம் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும்.

அப்போதுதான் வரதட்சணை ஒழிந்து வாடி வதங்கும் வனிதைகளுக்கு வாழ்வு கிடைக்கும். இல்லறமும் நல்லறமாகி இன்பம் பொங்கும். இன்ஷா அல்லாஹ்…..

இன்று மனித குலத்தை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் ஏராளம் ஏராளம். ஏழ்மை, பசி, பிணி, பணத்தாசை பதவிப்பித்து, லஞ்ச லாவண்யம், ஊழல், இனவெறி, நிறவெறி, மொழிவெறி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த வரதட்சணை. இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இது அவாளின் அன்பளிப்பு. இது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் தமிழக முஸ்லிம்களை கடிக்க வந்திருக்கும் நச்சுவரம். இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது. நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அறியாமைக்கால அரேபியர்களிடம் நிலவிய சில நடைமுறை பழக்க வழக்கங்களை இஸ்லாமிய நெறிமுறைகளாக அங்கீகரித்தார்கள். உதாரணத்திற்கு மிஸ்வாக் செய்தல், கத்னா செய்தல் போன்றவற்றை கூறலாம். அவை மனிதனுக்கு நன்மை பயக்கும் நற்பழக்கங்கள் என்பதால் அவற்றை இஸ்லாத்தில் சுவீகரித்துக் கொண்டார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டல்லவா? அந்த அடிப்படையில் அப்படிப்பட்ட நற்செயலில் ஒன்றானதா இந்த வரதட்சனை? இல்லையே! பின் எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?

அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி(ஸல்) அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?

ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக வரதட்சணை என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்? குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்? உடன் பிறந்த சகோதரிகளை ‘கரை’ ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்? கல்யாணம் என்பதே கானல் நீராகி கண்ணீர் சிந்தி நிற்கும் கன்னியர் எத்தனை பேர்? வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?

அறியாமைக் கால அரேபியர்களாவது பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். நவீன காலத்தில் வரதட்சணைக்கு பயந்து வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து பெண் என்று தெரிந்தாலே கருவறையை கல்லறையாக்கி விடுகின்றனர். இதையும் மீறி பிறக்கும் பெண் சிசுக்களுக்கு இருக்கவே இருக்கிறது கள்ளிப்பாலும், நெல்மணியும் இதுதான் 21ம் நூற்றாண்டின் நாகரீகம்.“அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாக) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வெறெதற்கும் அஞ்சாதவர்களே என குர்ஆன் கூறுகிறது. (அல்குர்ஆன் 9:18)

இதில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் “வாங்குகின்ற வரதட்சணையை வாங்கிக் கொள்ளுங்கள் கவலையில்லை, பள்ளிவாசலுக்கு செலுத்தவேண்டிய கமிஷனை கொடுத்து விடுங்கள் என்று நிர்வாகிகளும் ஜமாஅத்துகளும் தங்களுடைய கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்.

இத்தகைய தகுதி படைத்தவர்களா தமிழகத்தின் பெரும்பான்மை பள்ளிகளை பரிபாலனம் செய்து வருகின்றனர்? அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாக இருந்தால் தானே பள்ளிவாசலின் வருமானத்திற்கென வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள்.

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். (4:4) என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும் அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா? ஜம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மணப்பெண்ணிடம் வரதட்சணை வாங்கிக்கொண்டு அதிலிருந்து சிறு அற்ப தொகை 1001 ரூபாயை மணபெண்ணுக்கு மஹராக வழங்கி மணமுடிக்கும் மகா கெட்டிகாரர்கள் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். ‘மஹர் வழங்கி மண முடியுங்கள்” என்ற மறை மொழியை அப்படியே பின்பற்றுகிறார்களாம்! அல்லாஹ்வை எமாற்ற நினைக்கும் இந்த அயோக்கியர்கள்.

அல்லாஹ்வின் தூதர் எதை உங்களிடம் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள், இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் (59:7)

அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் (33:36)

மேற்கண்ட இறைவசனங்களின் படி நிராகரித்து வழிகேட்டிலும் குஃப்ரிலும் விழுந்து நாசமாவதா? என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ஒருத்தியை வாழ வைக்க ஒரு குடும்பத்தையே வறுமையிலும் கடன் தொல்லையிலும் தள்ளிவிடுவது என்ன நீதி? தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு அறிவிலி தொடங்கி வைத்த இந்த தீமை இப்போது காட்டுத்தீயாக பரவி பெரும் நாசம் விளைவித்து வருகின்றது.

“ஜந்தாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி” இது முதுமொழி. இப்போது “ஒரே ஒரு பெண் பிறந்தால் அவனும் ஓட்டாண்டி” இது புதுமொழி.

வசதிப்படைத்த பெண்ணின் பெற்றோர் சிலர் தங்களின் மகளுக்கு மனமுவந்து அன்பளிப்பாக வழங்குவதை நாம் குறைகூற இயலாது. அதை திருமணத்தன்று செய்யாமல் பிரிதொரு சமயத்தில் மணமக்களுக்கு செய்யலாமே! திருமணத்தன்று பலர் முன்னிலையில் இப்படி செய்வது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அல்லவா அமைந்து விடுகிறது. இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்? எனவே எக்கோணத்திலிருந்து பார்த்தாலும் இவ்வரதட்சணை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு கொடிய தீமையே என்பது மறுக்க முடியாத உண்மை.

இத்தீமையை ஒழிக்க அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே விட்டுச் சென்ற குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவது ஒன்றுதான் ஒரே வழி. நம் சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் கட்டுப்பட்டு நடப்பது என்ற திடமான உறுதியான முடிவை மணமக்களும், பெற்றோர்களும், ஜாமாஅத்தார்களும் மேற்கொண்டு நடைமுறைக்கு கொண்டு வருவோமேயானால் வரதட்சணை என்ன – மனிதனை வாட்டி வதைக்கும் அத்தனை தீமைகளுக்கும் நாம் சமாதி கட்டிவிடலாம்.

இறைவன் தன் திருமறையில் “விசுவாசிகளே நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்” என்று கூறுகின்றான். அத்துடன் நம் சந்ததிகளையும் பிள்ளை பிராயம் முதல் இஸ்லாமிய நெறியில் வளர்த்திடல் வேண்டும். அப்போதுதான் அடுத்த தலை முறையாவது வரதட்சணையைப் பற்றி எண்ணிப்பார்க்காது மேலும் திருமணம் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும்.

அப்போதுதான் வரதட்சணை ஒழிந்து வாடி வதங்கும் வனிதைகளுக்கு வாழ்வு கிடைக்கும். இல்லறமும் நல்லறமாகி இன்பம் பொங்கும். இன்ஷா அல்லாஹ்…..

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

அழைப்புப் பணியின் அவசியம்

அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே! எனவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும், தீமை குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும்.

நாலுபேர் எடுத்துச் சொன்னால் தனது நடத்தைகளையும், செயற்பாடுகளையும் மாற்றிக் கொள்ளும், அல்லது அதுகுறித்து நடுநிலையோடு சிந்திக்கும் மனோ நிலையுடனேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். “இதைச் செய்யுங்கள்” அல்லது “அதைச் செய்யாதீர்கள்” என பலரால் அல்லது பலவிடுத்தம் வேண்டப்பட்டால் அதற்கு இணங்கி நடக்க, தீயவன்கூட முற்படலாம். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழியாகும். மனிதனது இந்த மனோ இயல்பைப் பயன்படுத்தி அவனிடம் எழுச்சி பெறும் தீய உணர்வுகளை அழிக்கவும், அடக்கவும் மங்கி மறைந்து செல்லும் நல்லனவற்றை துலக்கி மெருகூட்டவும் அழைப்புப்பணி அவசியமாகின்றது.

மனிதர்களிலேயே சிலர் இருக்கின்றனர். அவர்கள் மற்றவர்கள் மனதில் தீய சிந்தனைகளை விதைப்பதையே வினையாகக் கொண்டவர்கள். அத்தகையவர்கள் உலோபித்தனம் செய்வார்கள்; (மற்ற) மனிதர்களை உலோபித்தனம் செய்யும்படியும் தூண்டுவார்கள். அல்லாஹ் தன் பேரருளிலிருந்து தங்களுக்குக் கொடுத்ததை (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்தும் கொள்வார்கள் அத்தகைய காபிர்களுக்கு இழிவுதரும் வேதைனையை நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (4:37) (பார்க்க 57:24) என்று கூறுகிறான்.

“அல்லாஹ்வின் பாதையைவிட்டும் மக்களைத் தடுக்கின்றான்” (4:167, 9:9, 47: 32)

இம்மறை வசனங்கள் தீமையை ஏவி நன்மையைத் தடுக்கும் சில மனிதர்களும் மக்கள் மத்தியில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

இவ்வாறே “முனாபிக்”கான ஆண்களும் பெண்களும் நன்மையைத் தடுப்பதிலும், தீமையை ஏவுவதிலும் ஒருவர் மற்றவருக்குத் துணையாக இருப்பதாக” அல்குர்ஆன் கூறுகின்றது. (9:67)

தீமையை ஏவி நன்மையத் தடுக்கும் இச்சூழலில் தஃவாவின் அவசியம் அத்தியவசியமாகின்றது.

மக்கள் நன்மைகளை விட்டும் வெகுவேகமாக வெருண்டோடிக் கொண்டிருக்கின்றனர். தீமைகளில் கிடைக்கும் அற்பசுகம், உலகாதாயம் என்பவற்றால் கவரப்பட்டு விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில்களாக தீமைகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை ஷைய்த்தானின் தோழர்கள் நரகத்தின் வாயில்களில் நின்று கொண்டு அதன்பால் மக்களை அழைக்கும் பிரச்சாரத்தை மூலை முடுக்கெல்லாம் முடுக்கிவிட்டுள்ளனர்.

வட்டி ஹராம் என்பது இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையாகும். இந்த வட்டியின் பக்கம் வாருங்கள் என தொலைக்காட்சி, வானொலி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் அழைப்புவிடுக்கின்றன. பத்திரிகையில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள், இனிப்பான திட்டங்கள் அன்றாடம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு தீமைக்காக தஃவா நடக்கின்றது. இஸ்லாமிய இரத்தங்கள் பலவும் வட்டியால் வார்த்தெடுக்கப்பட்டுள்ளன.

சூதாட்டம் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஷைய்த்தானின் செயல்களில் ஒன்றாகும். அதிஷ்டலாபச் சீட்டு லொத்தர்கள் என்ற பெயரில் நிமிடத்துக்கு நிமிடம் வானொலி தொலைக்காட்சிகளில் இதற்காக தஃவத் நடக்கிறது. பத்திரிகைகளில் பரபரப்பான விளம்பரங்கள், வீதிகள் தோறும் ஒலிபெருக்கி வைத்து இதற்காக தஃவா செய்யப்படுகிறது. இந்த ஷைய்த்தானிய அழைப்பு வீட்டுக் கதவுகளைக்கூட தட்டத் தவறவில்லை. இலங்கையில் அதிகமாக இந்தச் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களாக எமது சமூகத்தினர் காணப்படுகின்றனர்.

மது, பாவங்களின் தலைவாயிலாகும். இந்த மது பானத்திற்கான அழைப்பும் பரவலாக நடைபெறுகின்றது. இதற்காக பத்திரிகைகளில் அரைப்பக்க முழுப்பக்க கலர் விளம்பரங்கள் என்ற பெயரில் தஃவா நடைபெறுகின்றது. இவ்வாறே புகைத்தலின் பக்கம் அழைப்பதற்கும் நவீன பிரச்சார யுக்திகள் கையாளப்படுகின்றன.

ஆபாசத்தையும், வன்முறையையும், கவர்ச்சியையும் சதையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்ட இன்றைய சினிமாக்கள் சமூகத்தை சீரழித்து வருகின்றன. பத்திரிகை, தொலைத் தொடர்பு சாதனங்கள், பாதையோர சுவர்கள் அனைத்திலும் இன்றைய இளம் தலை முறையினரை இந்த இழிவின் பக்கம் இழுத்தெடுப்பதற்கான கவர்ச்சியான ஆபாசமான அழைப்பு(தஃவா) நடந்து கொண்டிருக்கின்றது.

வீண் கேளிக்கைகள், ஆடல் பாடல், இசைக் கச்சேரிகள், ஆண் பெண் கலப்பு நிகழ்ச்சிகள் என்பவற்றின் மூலம் எல்லா வகையான தீமைகளின் பக்கமும் மக்களைக் கவர்ந்திழுக்க கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவளிக்கப்படுகின்றன, இதற்காக சகல விதத்திலும் தொடர் பூடகங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வளவு பரவலாக தீமைக்கு ஆதரவான குரல் பலத்து ஒலிக்கும் போது நன்மையின் பால் அழைக்கும் குரல் மட்டும் பலமிழந்து போய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தீமையின் பக்கம் மக்கள் இழுபட்டுச் செல்லும் வேகத்தையும், அதற்காக செய்யப்படும் முயற்சிகளையும் பார்க்கும் போது நன்மையின்பால் அழைத்து தீமைக்கு எதிராகக் குரல் கொடுப்பது எவ்வளவு அவசியமானது என்பதை விளங்கமுடிகின்றது.

தவறைத் தடுக்காதிருக்கலாமா?
மேலே குறிப்பிடப்பட்டது போன்று தீமைகள் புயலாய் வீசும் போது உண்மையான இறைவிசுவாசி தானுண்டு தன்பாடுண்டு என்று இருக்கமுடியுமா? அவனது உடன்பிறப்புக்கள், உற்றார் உறவினர்கள், ஊரார், மற்றார்கள் அனைவரும் அழிவின் பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கும் போது இவன் வெறுமனே பள்ளியில் முடங்கிக் கிடக்கலாமா? ஒரு நாளும் இருக்கமுடியாது. இதனைப் பின்வரும் சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றன.

சுலைமான்(அலை) அவர்கள் தன் பட்டாளத்துடன் போகும் போது ஒரு எறும்பு தனது மற்ற எறும்புக் கூட்டங்களைப் பார்த்து “எறும்புகளே! நீஙகள் உங்கள் புதருக்குள் புகுந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய படையினரும் தாம் அறியாமலேயே உங்களைத் திண்ணமாக மிதித்து விட வேண்டாம்” எனக்கூறியது. (பார்க்க 27: 17-18)

இந்த சம்பவம் மூலம் ஓர் எறும்பு தனது மற்றைய எறும்புகள் அழிந்துவிடக் கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கறையை உணரமுடிகின்றது. ஓர் எறும்பே சமூக உணர்வுடன் நடந்திருக்கும் போது எமது சகோதரர்கள் அறியாமையால், ஷிர்க்கிலும் பித்அத்துக்களிலும் ஹராம்களிலும் மூழ்கியிருக்கும் போது மது, போதை, சினிமா, புகைத்தல், வட்டி, சூது என தம்மைத்தாமே அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடும் போது நாம் அவற்றைத் தடுக்காது இருக்கலாமா? அப்படி இருந்தால் இந்த எறும்பைவிட கீழான நிலைக்கல்லவா சென்றுவிடுவோம்.

இதே அத்தியாயம் மற்றுமொரு நிகழ்ச்சியைக் கூறுகின்றது. சுலைமான்(அலை)அவர்கள் தனது படையைப் பார்வையிட்டுக் கொண்டு வருகின்றார்கள். அங்கே “ஹுத்ஹுத்” என்ற பறவையைக் காணவில்லை. இந்தப் பறவை தாமதித்து வந்து அதற்குரிய காரணத்தைக் கூறாவிட்டால் அதை அறுத்துவிடுவேன்; அல்லது கடுமையாகத் தண்டிப்பேன் என்று போபத்தோடு கூறுகிறார்கள். அப்போது அந்தப் பறவை வந்து சுலைமான் நபியிடம் பின்வருமாறு கூறுகின்றது.

நீங்கள் அறியாத ஒரு செய்தியை நான் அறிந்து வந்துள்ளேன். ஸபாவில் இருந்து உறுதியான ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்துள்ளேன். அவர்களை ஒரு பெண் ஆட்சி செய்கிறாள். அந்த நாட்டில் சகல வளங்களும் காணப்படுகின்றன. மகத்தானதொரு சிம்மாசனமும் அவளுக்குண்டு. அவளும் அவளது சமூகமும் அல்லாஹ்வை வணங்காது சூரியனை வணங்குகின்றனர். ஷெய்த்தான் அவர்களது செயல்களை அவர்களுக்கு அழகாக்கி அவர்களை நேர்வழியைவிட்டு தடுத்துவிட்டான். அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டாமா? என்று கூறியது. (பார்க்க 27: 20-26)

இந்தச் செய்தியைக் கேட்ட பின் அந்தப் பெண்ணுக்கு சுலைமான் நபி தஃவா செய்து, அவள் இஸ்லாத்தில் இணைந்ததை அல்குர்ஆன் தொடந்து கூறுகின்றது.

ஒரு நாட்டு மக்கள் சூரியனை வணங்குவதைக் கண்டு ஒரு பறவை கவலை கொண்டுள்ளது. எமது சகோதரர்களில் பலர் அறியாமல் கப்று வழிபாட்டிலும் ஷிர்க்கான சடங்குளிலும் மூழ்கியுளளனர். இவற்றால் தாம் செய்கின்ற நல்லமல்களை அழித்து கொள்வதுடன், தம்மைத்தாமே நரகிற்குத் தயார்படுத்திக் கொண்டுமிருக்கின்றனர்.

இதனைக் கண்டு எமக்கு சிறிதளவாவது கவலை வரவில்லையென்றால் நாம் இந்தப் பறவையை விடக் கீழானவர்களாகவல்லவா இருப்போம். சாதாரணமாக ஒருவன் தனது அரசியல் தலைவன் அவமதிக்கப்படுவதை தாங்கிக்கொள்வதில்லை. தனது தலைவர் போட்ட கடையடைப்பை யாராவது மீறினால் இவன் சீறுகிறான், தாக்குகிறான் சாதாரண தலைவனையே இப்படி ஒருவன் வெறி கொண்டு மதிக்கும் போது ஷிர்க் செய்வதன் மூலம் அல்லாஹவுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. அல்லாஹ்வின் கட்டளைகள் பகிரங்கமாக மீறப்படுகின்றன. அப்போது அவன் சீறாமல் சிணுங்காமல் சின்னதொரு எதிர்ப்பையும் காட்டாது குறைந்தபட்சம் முகச் சுளிப்பையாவது காட்டாது கல்லுப்போல் நிற்கிறானெனில் இவனது இறை விசுவாசத்திற்கு அது ஒரு களங்கமாகிறது.

ஈமானுக்கு சிறப்பு:
அல்லாஹ்வை முஸ்லிம்களாகிய நாம் ஈமான் கொண்டுள்ளோம். நாம் சத்தியப் போதனையில் ஈடுபடும் போதுதான் எமது ஈமான் சிறப்புப்பெறுகின்றது. இந்த தஃவத் எனும் பணியால்தான் நாம் ஏனைய சமூகங்களை விட சிறப்புப் பெற்றிருக்கின்றோம். இதனை,

“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதா யத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள், தீயதைவிட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின் மீது திடமாக நம்பிக்கை கொள்கிறீர்கள்…” (3: 110)

என்ற மேற்படி வசனத்தை நோக்கும் போது ஏலவே நாம் குறிப்பிட்டதை உணரலாம்.

பற்று:
அடுத்து ஒருவன் ஒரு கொள்கையில் எவ்வளவு தூரம் நம்பிக்கை வைத்தவன் என்பதை அந்தக் கொள்கைக்காக அவன் செய்யும் தியாகம், அது வாழ அவன் எடுக்கும் முயற்சி என்பவற்றின் மூலமே நாம் உணரமுடியும். அல்லாஹ்வை நான் ஈமான் கொண்டுள்ளேன். இஸ்லாத்தை என் வாழ்க்கைத் திட்டமாகவும், இறைதூதரை என் தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுள்ளேன். நான் இந்த அடிப்படையில் வாழ்வேன் மற்றவர்கள் இப்படி வாழ்வதற்காக எந்த முயற்சியையும் நான் எடுக்கமாட்டேன். அதேவேளை நான் ஏற்ற கொள்கைக்கு எதிராக எவராவது செயல்பட்டால் எனக்கு எரிச்சலோ கோபமோ வராது. அதைத்தடுப்பதற்கு முற்படமாட்டேன் என்ற நிலையில் ஒருவர் வாழ்ந்தால் அவர் கொள்கைப் பற்றுடையவர் என்று எவரும் கூற மாட்டர். உண்மையும் அதுதான்.

இவ்வகையில் இஸ்லாத்தை இதயத்தில் ஏற்று அதைப்பிறருக்கும் எடுத்துச் செல்லும் போதுதான் ஒருவன் இஸ்லாம் என்ற கொள்கையில் பற்றுடையவனாக இருக்க முடியும். எனவே, இறைவன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் தராதரத்தை மதிப்பிடும் சாதனமாக இந்த அழைப்புப்பணி அமைந்துள்ளது எனலாம்.

வாழ்க்கையின் வெற்றி:
மனித வாழ்வின் வெற்றியே இதில் தங்கியிருப்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது.
“நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு (நல்ல) அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக் கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)” என்ற சூறா அல் அஸ்ரின் கூற்றை நோக்கும் போது அழைப்புப்பணி என்பது ஒரு இஸ்லாமியனின் இலட்சியத்துடன் இரண்டறக் கலந்ததாக இருக்க வேண்டும் என்பதை விளங்கலாம்.

முஸ்லிம் என்பதன் சிறப்பு:
முஸ்லிம் என நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம். இந்த முஸ்லிம் என்ற பெயர் அழகைப் பெறவேண்டுமானால் நாமும் நல்லமல் செய்வதுடன் பிறரையும் அதன்பால் அழைத்துக் கொண்டு நம்மை நாம் ஒரு முஸ்லிமாகப் பிரகடனப்படுத்த வேண்டும். வெறுமனே முஸ்லிம் எனக் கூறிக்கொள்வதில் அழகோ சிறப்போ இல்லை என்பதை பின்வரும் வசனம் உணர்த்துகின்றது.

“அல்லாஹ்வின்பால் (மக்களை) அழைத்து, (தானும்) நற்செயல்செய்து; நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுபவனை விட சொல்லால் மிக அழகானவன் யார்?” (41:33)

இதிலிருந்து நான் முஸ்லிம் எனக்கூறும் நமது வார்த்தை அழகு பெறவேண்டுமென்றால் தஃவாப் பணியில் நாம் ஈடுபடுதல் வேண்டும் என்பதை உணரலாம்.

மார்க்கக் கடமை:
தஃவாப் பணிபுரிவது “பர்ழுஅய்ன்” அனைவரும் அவசியம் செய்தேயாக வேண்டிய கடமையாகும். இப்பணியைச் செய்யாதபோது குற்றவாளியாக நேரிடும் என்ற கருத்தை சில அறிஞர்கள் கூறுகின்றனர். மற்றும் சிலரோ “இல்லை இது “பர்ழுகிபாயா”, சிலர் செய்துவிட்டால் மற்றவர்கள் மீதுள்ள கடமை நீங்கிவிடும். அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்” என்பர்.
தஃவாப் பணியைப் பொறுத்த வரையில் சில போது பர்ழுஅய்னாக உள்ளது. சிலபோது பர்ழுகிபாயாவாக மாறலாம். உதாரணமாக, ஒரு சபையில் மார்க்க முரணான செயல் நடை பெறுகிறது. ஒருவர் அதனைத் தடுக்கின்றார் அத்தோடு அந்தத் தவறு கைவிடப்படுகின்றது. இந்த வேளையில் அங்கிருந்த ஒவ்வொருவரும் அந்தத் தவறைக் கண்டிக்க வேண்டியதில்லை. இப்போது ஒருவர் செய்தால் மற்றவர்கள் மீதுள்ள பொறுப்பு நீங்கிவிட்டது எனலாம்.

மேற்குறித்த அதே சந்தர்ப்பத்தில் ஒருவர் கூறியபின்னரும் அத்தவறு நடைபெறுகின்றதென்றால் அங்கிருக்கக்கூடிய மற்றவர்களும் இவருக்குத் துணையாக தமது அதிருப்தியை வெளிக்காட்டக் கடமைப்படுவர். இப்போது தஃவா பர்ழு அய்னாக மாறும் எனக்கூறலாம்.

எது எப்படியிருப்பினும் தஃவத் பணி பர்ழு-கட்டாயமானது என்பதில் கருத்து வேறுபாடில்லை. நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றும் அனைவரும் இப்பணியைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை சூறா யூசுப்பின் 108-வது வசனம் கூறுகின்றது.

தண்டனைக்கு ஆளாக நேரிடும்:
தவறைத் தடுக்கத் தவறும் போது அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாக நேரிடும் அந்தத் தண்டனை தீயவர்களை மட்டுமன்றி நல்லவர்களையும் பீடித்துக் கொள்ளும். இதனை,

“உங்களில் அநியாயக்காரர்களுக்கு மட்டுமே ஏற்படாது (அனைவருக்கும் சேர்த்து ஏற்படுகின்ற) தண்டனையை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடினமானவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்” (8:25) என்ற வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.

ஒரு தவறு பகிரங்கமாக நடந்து அதனைத் தடுப்பதற்கான ஆற்றல் இருந்தும் தடுக்கப்படவில்லையானால் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாக நேரிடும் என்பதை பல நபி மொழிகள் உணர்த்துகின்றன.

எப்படிச் செய்வது?
அழைப்புப்பணி புனிதமானதுதான். அதற்கு ஈடுஇணையற்ற நற்கூலியுள்ளது. ஆயினும் அனைவரும் இப்பணியை ஆற்றமுடியுமா? எல்லோருக்கும் மேடையில் ஏறி நின்று பயான் பண்ண முடியுமா? இது சாத்தியம்தானா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படுவது இயல்பு.

தஃவத் என்றதும் குத்பா ஓதவேண்டும்; பயான் செய்யவேண்டும் என்று கருதுவதே இதற்குக் காரண மாகும். தஃவாவில் மேற்குறித்தவை அடங்கினாலும் அவை மட்டும்தான் தஃவத் என்பதற்கில்லை.

தான் அறிந்த மார்க்கச் செய்தியை பிறருக்கு எடுத்துக் கூறுவதே தஃவத்தாகும். இதற்காக முழுமையாக மார்க்கத்தை அறிந்து தெளிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் சொல்லும் விடயத்தில் மட்டும் தெளிவு இருந்தாலும் போதுமானதாகும். இதை உணராத பலர் அழைப்புப்பணி ஆலிம்களின் கடமை என நினைக்கின்றனர்.
ஆலிம்களைவிட அதிகமாக தனிநபர் தஃவாவை செய்யும் வாய்ப்பை பொதுமக்கள் பெற்றுள்ளனர். பள்ளிக்கூட தோழர்கள், நண்பர்கள், காரியாலத்தில் சேர்ந்து பணியாற்றுகின்ற அனைவரிடமும் உரையாடல் மூலமாக தஃவாவை முன்னெடுத்துச் செல்லலாம். இதனைச் செய்வதற்கு முன்கூட்டியே தலைப்புத் தெரிவு செய்து திட்டமிட்டு உரையாட வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.

பேச்சோடு பேச்சாக, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நல்ல கருத்துக்களை முன்வைக்க முடியும். அவரிடம் காணப்படும் தவறான கருத்துக்களைக் களைய முடியும் இதற்கு யூசுப்(அலை) அவர்களது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உதாரணமாகக் கூறமுடியும்.

நபி யூசுப்(அலை) அவர்கள் சிறையில் நீண்டகாலம் இருந்தார்கள். அவர்களுடன் இன்னும் இருவர் அச்சிறையில் இருந்தனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட கனவுகளுக்குரிய விளக்கத்தை அறிந்து கொள்வதற்காக யூசுப் நபியிடம் வந்து தாம் கண்ட கனவுகளை எடுத்துக்கூறி விளக்கம் கேட்டனர். யூசுப்(அலை) அவர்கள் விளக்கம் கூறுவதற்கு முன்னரே பல தெய்வங்களை வழிபடுவது சிறந்ததா? அல்லது அனைத்தையும் அடக்கியாளும் அல்லாஹ் சிறந்தவனா? என்று கேட்டார்கள். இதன் மூலம் அவர்களது சிந்தனையில் ஏகத்துவத்தின் சிறப்பைப் பதியச் செய்தார்கள்.

இதனைத் தொடந்து அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் வணங்குபவைகள் அனைத்தும் போலியானவை. அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் அதுதான் சரியான மார்க்கம். என்ற கருத்துக்களை முன் வைத்தார்கள். (பார்க்க 12: 36-40)

இங்கே சிறைச்சாலையில் தன்னுடன் இருந்த வர்களிடமே யூசுப்(அலை) அவர்கள் பேச்சோடு பேச்சாக தஃவாவை முன்வைத்திருப்பதைக் காணலாம். இத்தகைய வாய்ப்புக்கள் அன்றாடம் அனைவருக்கும் ஏற்படலாம். தருணம் பார்த்திருந்து தக்க நேரத்தில் கருத்துக்களை முன்வைப்பதில் நாம் முனைப்போடு செயல்பட வேண்டும்

அழைப்புப்பணிக்காக தன்னால் முடிந்தவரை ஒத்துழைப்பு நல்குவதுகூட ஏற்றமான இபாதத்தாகவே திகழ்கின்றது. பின்வரும் இரண்டு சம்பவங்களும் இதனைத் தெளிவாக உணர்த்துகின்றன.

ஒரு கிராமத்துக்கு அல்லாஹ் இரண்டு தூதர்களை அனுப்பினான். அவ்விருவரையும் அம்மக்கள் பொய்ப்படுத்தவே, மூன்றாவது ஒரு தூதரையும் அல்லாஹ் அனுப்பினான். இருப்பினும் அம்மக்கள் நேர்வழிபெறவில்லை. மாறாக இந்தப் போதனையை நிறுத்திக் கொள்ளாவிட்டால் கல்லெறிந்தே கொன்றுவிடுவோம் என்று தூதர்களை எச்சரிக்கின்றனர். தாக்கவும் முற்படுகின்றனர்.

அப்போது அந்த ஊரின் எல்லைப்புறத்திலிருந்து ஒருமனிதர் வருகிறார். அவருடைய பெயரை ஹபீ புன்னஜ்ஜார் என அல்குர்ஆன் விளக்கவுரைகள் கூறுகின்றன. அவர் வந்து தனது சமூகத்தவர்களைப் பார்த்து;
“மக்களே! இந்த இறைதூதர்களைப் பின்பற்றுங்கள். இவர்கள் நேர்வழியில் இருக்கின்றனர். அதேவேளை உங்களிடம் மார்க்கத்தைச் சொல்வதற்காக அவர்கள் கூலியும் கேட்கவில்லை” என்றார். அப்போது ஊர்மக்கள் “நீயும் இவர்கள் கூறுவதை நம்பிவிட்டாயா?” என்று வினவுகின்றனர்.

“என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காமல் இருக்கமுடியும். நீங்களும் மறுமையில் அவன் பக்கமே மீட்டப்படுவீர்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வத்தை நான் வழிபடமாட்டேன். அல்லாஹ் எனக்கு ஒரு கஷ்டத்தைத் தர நாடிவிட்டால் இந்த போலி தெய்வங்களால் அதைத் தடுக்கமுடியாது. நிச்சயமாக நான் உங்கள் இரட்சகனை ஈமான் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றார்.

ஆத்திரப்பட்ட மக்கள் அவரைக் கொலை செய்து விட்டனர். அவர் மரணித்ததும் “நீ சுவனத்தில் நுழைந்துவிடு என்று கூறப்பட்டது” இப்பாதகத்தைச் செய்தவர்கள் அழிக்கப்பட்டார்கள். (பார்க்க 36: 13-29)

இங்கே அந்த இறைதூதர்களின் முடிவு என்ன என்பது பற்றிக் கூறப்படவில்லை. தூதர்களின் தஃவாப் பணிக்குத்துணை நின்ற மனிதர் பற்றியே பேசப்படுகின்றது. சத்தியப் போதனைக்கு துணைநின்ற அவர் செய்த தியாகத்திற்கு கூலியாக அல்லாஹ் அவருக்கு சுவனத்தை வழங்குகிறான்.

ஆலிம்கள் அழைப்புப்பணி செய்தால், அதற்கு துணை நிற்பவர்களாக பொது மக்கள் செயல்பட முடியும். நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, அவர் கூறுவதைக் கேட்க மக்களை அழைத்துவருவது, அவருக்குப் பாதுகாப்பளிப்பது, பக்கபலமாக இருப்பது, அவர் விடயத்தில் எல்லைகடந்து செல்பவர்களை அடக்குவது ஆகிய அனைத்துப் பணிகளும் அழைப்புப்பணியின் வட்டத்துக்குள் அடங்கக் கூடியவையே.

மற்றுமொரு நிகழ்ச்சியையும் இங்கே இதற்கான ஆதாரமாகக் கொள்ளமுடியும்.

மூஸா(அலை) பிர்அவ்னிடம் பிரச்சாரத்துக்காக சென்றார்கள். அப்போது பிர்அவ்னின் சபையில் அவனது குடும்பத்தைச் சேர்ந்த மறைமுகமாக ஈமான் கொண்ட ஒரு மனிதரும் இருந்தார். மூஸா(அலை) அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பிர்அவ்ன், “நான் மூஸாவைக் கொல்லப்போகிறேன்” என்றான்.

இந்த சந்தர்ப்பத்தில் ஈமானை மறைத்துக் கொண்டிருந்த அம்மனிதர் “அல்லாஹ்தான் என் இரட்சகன் எனக் கூறியதற்காகவா ஒரு மனிதனைக் கொல்லப் போகிறீர்கள். அத்தோடு அவர் உங்களது இரட்சகனிடமிருந்து அத்தாட்சிகளை வேறு கொண்டு வந்துள்ளார். அவர் பொய் சொல்லுகிறாரெனின் அவரது பொய் அவரோடே இருக்கட்டும். அவர் உண்மை சொல்லுபவராக இருந்து, அவரைத் தண்டித்து விட்டால் அவர் எச்சரிக்கை செய்வது போன்ற அழிவுகள் நமக்கு ஏற்பட்டால் என்ன செய்வது என்று கூறினார்.

தொடர்ந்து பிர்அவ்னிடம் பேசி, கொலை செய்யும் முடிவில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றார்.
(பார்க்க 40: 28-44)

ஒரு அழைப்பாளனுக்கு ஆபத்து ஏற்படும் போது சாதுரியமாகப் பேசி அதிலிருந்து அவரைக் காத்த இந்த மனிதரை அல்லாஹ் எமக்குப் படிப்பினையாக அல்குர்ஆனில் நினைவு கூறுகின்றான். இவ்வாறு செயல்படுவது கூட தஃவாவில் ஒரு அங்கம்தான்.

எனவே, அழைப்புப்பணி அவசியமான பணியாகும். அது மார்க்கக் கடமை மட்டுமல்ல, இம்மையில் தவறுகளின் தீங்குகளிலிருந்து நம்மையும் , மனித சமூகத்தையும் காக்கும் பணியாகவும் காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தனது வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப இப்பணியில் பங்கேற்க வேண்டும். இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதன் மூலம் இம்மை மறுமையில் பயன் பெறலாம்.

இம்மாபெரும் பணியில் ஈடுபடும் பலரும் தஃவத் தப்லீகின் பெயரால் மார்க்கத்தை மறைக்கின்றனர். அது மட்டுமன்றி மறைப்பதுதான் சரியான தஃவத் அணுகுமுறை என்றுவேறு கூறி வருகின்றனர். இக்கருத்து எவ்வளவு தூரம் இஸ்லாமிய சிந்தனையை விட்டும் மாறுபட்டது என்பதைத்தொடர்ந்து நோக்குவோம். நன்றி;இஸ்லாம் கல்வி.காம்

வெள்ளி, 17 டிசம்பர், 2010

பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-

பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-


அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.


1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த
வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது
எனக்குத் தெரியாது.
இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே
உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும்.
(இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில்
தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம்
நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள்.



2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது
குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன்
பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின்
குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ
தண்டிக்கப்படமாட்டாது.



3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட)
கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல்
ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ
இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக
நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும்
உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது.
அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து
செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக்
கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ்
இப்னு அப்துல் முத்தலிப்
அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்...

5.மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள்
மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள்
மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட
(அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள்
மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள்
விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால்
படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு
அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு
வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து
கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப்
புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே
என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள்
நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர்
எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன்
விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை
வி;டுச்செல்கிறேன்... அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.
முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன!
இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை.
உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து
கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள்.
உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி
வாருங்கள்.
ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள்
செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப்
படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று
ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக்
கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச்சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.

8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன்
உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு
நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக
மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த
பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும்
நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும்
செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு)
தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும்
சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)

9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும்
ஒருவரே!இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட
உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை
நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை
விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால்
படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும்
இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல்
பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக்
கேட்டனர்.

10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா?
இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம்
விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?
'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்!
இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக
நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து
அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!'
அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப்
பேரொலி.
இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது
திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!!
அல்லாஹும்மஷ்ஹது!!!

இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி!
இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.
மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச்
செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள்... ஏனெனில் நேரில் கேட்போரைவிட
கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.

(ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது,
இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்.


''ஒவ்வொரு தூதரும்அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர் எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் -நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்:  ( புகாரி,முஸ்லிம் )


'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''



நன்றி; அடியற்கை தவ்ஹீத் பிரதர்ஸ் 

செவ்வாய், 14 டிசம்பர், 2010

குர்ஆனும் சுன்னாவும்

    அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. அல்குர்ஆன் 33:21

    குர்ஆனையும் சுன்னாவையும் மறுத்து வாழ்வது என்பது நம்முடைய நம்பிக்கையில் - ஈமானில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அது மிகப் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடியதாக இருக்கின்றது. குர்ஆனிலும் மற்றும் சுன்னாவிலும் தகுந்த பரீட்சயம் அல்லது அறிவு இல்லாததன் காரணமாக இன்றைக்கு முஸ்லிம்கள் தாங்கள் கண்களில் காண்பதெல்லாம் இஸ்லாம் என்று ஷேக்மார்கள் பின்னாலும் முரீதுகள் பின்னாலும் அவ்லியாக்கள் பின்னாலும் உலமாக்கள் பின்னாலும் ஓடிக்கொண்டு இஸ்லாம் அல்லாதவைகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வருவதைப் பார்த்து வருகின்றோம். மேலும் இவர்களைப் பின்பற்றுவதும் அவர்களிடம் தங்களது கோரிக்கைகளை வைப்பதும் அவர்களது கப்றுகளுக்கு ஜியாரத் செய்வதும் நன்மையான காரியங்கள் என்றும், அவை நன்மைகளைகளையும் இறைப் பொறுத்தத்தையும் பெற்றுத் தரும் என்றும் நம்பிக்கொண்டு அவர்களைப் புனிதமானவர்களாகக் கருதி தங்களது பிழை பொறுத்தருளப் பிரார்த்திப்பதும் இன்று நடைமுறையில் முஸ்லிம்களிடம் காணப்பட்டுக் கொண்டிருக்கும் வழிகேடுகளாகும்.
    இன்னும் முக்கியமான நாட்களாக சில நாட்களைத் தேர்வு செய்து கொண்டு அந்த நாட்களில் சூரா ஃபாத்திஹாவை ஓதுவது குர்ஆனைக் குழுவாக அமர்ந்து ஓதி அதனை கத்தம் செய்வது மேள தாளத்தோடு சந்தனக் கூடு எடுப்பது அவுலியாக்களின் பிறந்த மற்றும் இறந்த தின வைபவம் கொண்டாடுவது இவைகளெல்லாம் இஸ்லாத்தில் உள்ளவை என்றும் இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இறைவனுடைய நெருக்கத்தையும் பாவ மன்னிப்பையும் நன்மைகளையும் பெற்றுத்தரக் கூடியவைகள் என்று நம் முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றார்கள். இவைகளெல்லாம் குர்ஆனைப் பற்றியும் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளான சுன்னாவைப் பற்றியும் அறியாதவர்களினால் பின்பற்றப்படுகின்ற வழிகேடுகளாகும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. இறைவனுடைய குர்ஆனையும் இறைத்துாதர் (ஸல்) அவர்களின் போதனைகளைப் பின்பற்றுவது ஒன்றே ஒரு மனிதனை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கக் கூடியதாக இருக்கும்.

    இன்றைக்கு வழிகேடுகள் எல்லாம் காட்டுத் தீ போல மிக வேகமாகப் பரவி வருகின்றது. இதில் ஒரு உண்மையான முஸ்லிம் தன்னை இழந்து விடாமல் பாதுகாக்க விரும்பினால் அவன் குர்ஆனைப் பற்றியும் இறைத்துாதர் (ஸல்) அவர்களது போதனைகளைப் பற்றியும் மிகத் தெளிவாக அறிந்திருப்பதோடு தன்னுடைய வாழ்க்கையில் முழமையாக அவற்றை பின்பற்றவும் வேண்டும். மேலும் நாம் அறிந்து கொண்ட இந்த சத்தியத்தை பிறருக்கு எடுத்து வைப்பதிலும் நாம் கண்ணுக் கருத்துமாக இடைவிடாது பாடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    இன்று துரதிருஷ்டவசமாக சிலர் சுன்னாவையும் அதனைப் பின்பற்றுவதன் மதிப்பையும் மறுக்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் சிலர் தாங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் நடைமுறைகள் உண்மையானவை தானா என்று அறிந்து கொள்ள முற்படாமலேயே இருக்கின்றார்கள். மேலும் சிலர் சுன்னாவைப் பற்றிய சந்தேகத்திலேயே தங்களது வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் இப்பொழுது ஒரு கடைத்தெருவுக்குப் போகின்றோம் என்றால் நமக்குத் தேவையான பொருள்களில் எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுத்து வாங்கின்றோமில்லையா? அதைப் போல சுன்னாவிலும் எது ஸஹீஹானது (ஆதாரமுள்ளது) எது ழயீஃபானது (புனைந்துரைக்கப்பட்டது பொய்யானது) என்பதை இனங் கண்டு பின்பற்றுவதும் அவசியம் தானே! அதே போல புத்தகக் கடைக்குச் சென்றால் நமக்குப் பிடித்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து அந்தப் புத்தகத்தின் மீது நம்முடைய முகங்களைத் தொலைத்து விடும் அளவுக்கு அதில் மூழ்கி விடுகின்றோம் அதைப் போலவே நமக்குப் பிடிக்காத புத்தகத்தை தொட்டுக் கூடப் பார்ப்பதில்லை. இதே போல மனநிலையை சுன்னாவிலும் செலுத்துவது எவ்வாறு? எனக்குச் சுன்னாவைப் பின்பற்றுவது பிடிக்கவில்லை அதனால் நான் அதனை அறிந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை என ஒதுங்கி விடலாமா?!
    ஓருவர் இறைத்துாதர்கள் செய்து காட்டிய அற்புதங்களை மறுக்கின்றார் ஒருவர் ஐந்து நேரத் தொழுகைகளுக்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று நேரத் தொழுகைகள் போதுமென்கின்றார் நோன்பு நோற்க வேண்டும், அதற்கு எதற்கு 30 நாட்கள் ஒன்றிரண்டு நாட்கள் இருந்தால் போதும் தானே!  என இன்னும் சிலர் முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கீழ்படிவது அவர்களது வாழ்நாளுடன் முடிந்து விட்டது இப்பொழுது அதற்கு அவசியமில்லை என்று சுன்னாவை மறுப்பதில் ஒவ்வொரு அளவுகோள்களை வைத்துக் கொண்டு அதனை மறுத்துக் கொண்டு இருப்பதை நம் நடைமுறையில் காண முடிகின்றது. இவர்கள் தங்களது அலுவல்கள் மற்றும் நேரங்களை இந்த சுன்னாவை எதிர்ப்பதிலும் அதனைச் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதிலேயே கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
    தெளிவான ஹதீஸ்களுடன் பொய்யான ஹதீஸ்களும் கலந்து விட்டிருக்கின்ற காரணத்தால் அதனை இனம் பிரிக்கும் அளவுக்கு அதற்கான கல்வி ஞானம் இல்லாத காரணத்தால் ஹதீஸ்களை என்னால் பின்பற்ற இயலாது அதனைப் பின்பற்றுவதிலிருந்து நான் விலகி இருக்கவே விரும்புகின்றேன் என்று சிலர் கூறிக் கொண்டு முஹம்மது (ஸல்) அவர்களுடைய சுன்னாவிற்குக் கட்டுப்படாமல் அவற்றைப் புறக்கணித்துக் கொண்டு இருப்பதை நாம் காண முடிகின்றது. இந்த இவர்களது பிடிவாதத்தை விளக்க வேண்டுமென்றால் : ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவனுக்கு மருந்துகள் தேவைப்படுகின்றது. இன்று உண்மையில் மருந்துக் கடைகளில் உண்மையான மற்றும் போலி மருந்துகளும் விற்கப்படுகின்றதெனில் போலியைத் தவிர்த்து விட்டு நல்ல மருந்துகளை வாங்குவதற்கு நாம் எவ்வாறு அதில் பரிச்சயப்பட்ட நபரைத் தேடி அவரது துணையை நாம் பெற்றுக் கொள்வதில் எதுவும் நம்மைத் தடுத்து விடாது என்பது நடைமுறை உண்மையாகும். தனக்குாிய அந்த அசலான மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஒருவன் விரும்புவானா அல்லது அசலும் போலியும் கலந்திருக்கின்றது. எனவே நான் எந்த மருந்தையும் வாங்கப் போவதில்லை யாருடைய துணையையும் தேடப் போவதில்லை என்று கூறி சாவை எதிர்கொள்வானா?
    இன்றைக்கு கடவுளே இல்லை என்ற கொள்கையும் நன்மைகளும் தீமைகளும் நம்மைச் சுற்றி இருந்து கொண்டிருக்கும்பொழுது நம்முடைய இந்த நிலைப்பாடு இத்தகைய தீமைகளில் நாம் ஈடுபட்டு விடுவதிலிருந்து நம்மைத் தடுத்து விடாது. எனவே ஆதாரமான ஹதீஸ்களும் ஆதாரமற்ற ஹதீஸ்களும் கலந்து இருக்கின்றது என்ற காரணத்தைக் கூறி நான் சுன்னாவைப் பின்பற்ற மாட்டேன் என்று கூறுவது சுன்னாவை அவமிதிக்கும் செயலாகும். இந்த உலக வாழ்க்கையில் நமக்கு எது நல்லது எது கெட்டது என்று நாம் தேர்ந்தெடுத்து அனுபவிக்கின்றோமோ அது போல சுன்னாவையும் நாம் எது ஆதாரமுள்ளது எது ஆதராமற்றது என்று அறிந்து சுன்னாவைப் பின்பற்றுவதும் அந்த சுன்னாவிற்குக் கட்டுப்பட்டு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும்தான் ஒரு முஸ்லிமின் மீது உள்ள அடிப்படைக் கடமையாகும். சுன்னாவைத் தேர்ந்தெடுக்கின்ற விசயத்தில் எது ஆதாரமற்றது என்று தெரிய வருகின்றதோ அதனை அறிந்த மாத்திரத்திலேயே உதறித் தள்ளிவிடுவதும் ஒரு உண்மையான முஸ்லிமின் மீதுள்ள கடமையுமாகும்.
    தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். அல்குர்ஆன் 16:44
    இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 5:92
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். அல்குர்ஆன் 6:153

திங்கள், 13 டிசம்பர், 2010

முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ                                                        إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ
41:30நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.
41:31   نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ  ۖ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ
41:31“நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.
41:32   نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ
41:32“மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்” (இது என்று கூறுவார்கள்).  
41:33   وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ
41:33எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
41:34   وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ۚ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ
41:34நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.

[சூரா இக்லாஸ்]

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்   நபியே! நீர்  கூறுவீராக;அவன் அல்லாஹ் ஒருவனே அல்லாஹ் [யாவற்றை விட்டும்] தேவையற்றவன்  யாவும் அவன் அருளையே  எதிர்ப்பார்த்திருக்கின்றன அவன் எவரையும்  பெறவில்லை  எவராலும்  பெறப்படவுமில்லை  மேலும் அவனுக்கு நிகராக எவருமில்லை [சூரா இக்லாஸ்]