திங்கள், 31 ஜனவரி, 2011

இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்!


இஸ்லாம் ஏனைய மதங்களைப் போலல்லாமல் சகோதரத்துவத்தை அதிகமாக வலியுறுத்துகின்றது. அதற்கென இருக்கின்ற வழிகாட்டல்களை தெளிவாக விளக்குகின்றது. சகோதரத்துவத்திதை இல்லாமல் ஆக்குகின்ற அல்லது அதற்கு களங்கம் ஏற்படுத்துகின்ற அனைத்து வழிகளையும் முற்றாக தடை செய்திருப்பதோடு அதை மீறி செயல்படுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு எனவும் எச்சரிக்கைச் செய்கின்றது. இதன் மூலம் பலம் வாய்ந்த ஒரு சமுதாயத்தையும், ஈமானிய சமுதாயத்தையும் ஒற்றுமையை வளர்ப்பதுவுமே இதன் குறிக்கோளாகும். இது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.
இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது இதன் உண்மை நிலையை அறிந்துக் கொள்ளலாம். நபி (ஸ்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன்னிருந்த அக்கால அரேபியர்கள் எந்த முறையில் வாழ்ந்து  கொண்டிருந்தார்கள்? புனிதமான அந்நகரில் அவர்களுக்கு மத்தியில் கோத்திர வெறி தலைவிரித்தாடியது! கோத்திரங்களுக்கிடையில் வருடக்கணக்காக சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள்! வாழையடி வாழையாக அதனைத் தொடர்ந்து செய்துகொண்டே வந்தார்கள். அடிமை, எஜமான் என்ற பாகுபாடு அதிகமாக காணப்பட்டன! எஜமானர்களோ தங்களது அடிமைகளை தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடத்தினார்கள். நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம், மொழிக்கு மொழி, கோத்திரத்திற்கு கோத்திரம், இனத்திற்கு இனம், நிறத்திற்கு நிறம் என்றெல்லாம் பலவிதமான பாகுபாடுகளுடன் வாழ்ந்து வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்ட பிறகு இஸ்லாம் இவை அனைத்திற்குமே முற்றுப்புள்ளி வைத்தது. அல்-குர்ஆன் அருளப்பட்டது! ஈமானிய ஒளி பிரகாசித்தது! நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் அச்சமுதாய மக்களின் உள்ளத்துக்கு தெளிவுபடுத்தினார்கள். அவர்களுக்கு சிறந்த அறிவைக்கொண்டு நேர்வழியை அடைவதற்குரிய வழிமுறையைக் காட்டினார்கள். இதனால் அவர்களது உள்ளங்கள் அமைதி பெற்றன. இறைவிசுவாசம் என்ற ஒரே கோட்பாட்டின் கீழ் அவர்கள் ஒன்றினைந்தார்கள். அனைத்து வேற்றுமைகளில் இருந்தும் நீங்கிக்கொண்டார்கள். கோத்திர வெறி மற்றும் உலக ஆசைகள் இவைபோன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பகரமாக ஈமானிய சகோதரத்துவத்தை உருவாக்கினார்கள். அதே கோட்பாட்டின் கீழ் அனைவருமே ஒன்றினைந்து செயற்பட்டார்கள்! இதனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வல்லரசை ஏற்படுத்துகின்ற அளிவிற்கு மிகப்பெரும் வெற்றியையும் பெற்றார்கள்!
இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்!
(1) இஸ்லாம் சகோதரத்துவத்தை இறைவிசுவாசத்துடன் இணைத்துக் கூறுகின்றது. இரண்டு சகோதரர்களுக்கு மத்தியில் பிணக்கு ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைக்கவும் கட்டளையிடுகின்றது (அல்-குர்ஆன் 49:10).
இந்த வசனம் நமக்கு எதனைப் போதிக்கின்றது? இறைவிசுவாசிகள் அனைவருமே சகோதரர்கள் என்பதன் மூலம் சகோதரத்துவத்தைத் தூண்டக்கூடியதாகவும், சகோதரத்திற்கு களங்கம் ஏற்படுகின்ற விசயங்கள் நடந்துவிட்டாலும் அதைத் தீர்த்து வைக்கவும் ஏவுவதன் மூலம் சகோதரத்துவம் மென்மேலும் உருவாகும் என்பதனை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. நபித்தோழர்களது வாழ்க்கையும் இவ்வாறே அமைந்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் தனது தோழர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் வருகின்ற போது அவ்வப்போது அவற்றை தீர்த்துவைத்து ஒற்றுமையாக்கியிருக்கின்றார்கள். இதனால் தான் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுடன் பேசாமல் இருப்பதைக் கூட இஸ்லாம் தடை செய்திருக்கின்றது.
(2) ஒரு முஃமின் இன்னொரு முஃமினை நேசிப்பதற்கும் இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்).
நமது முஸ்லிம் சமூகத்தில் தற்போது நிலவுகின்ற ஒற்றுமை இன்மைக்கும் அதனால் நமது சமூகம் பல பிரிவுகளாகப் பிரிந்து சின்னாபின்னமாகப் போயிருப்பதற்கும் தற்காலத்தில் மிக முக்கிய காரணமாக அமைவது இந்த நபிமொழியில் அடங்கியிருக்கின்ற மிகக்கடுமையான எச்சரிக்கையை அலட்சியம் செய்து அதற்கு மாற்றமாக நடப்பதுவேயாகும் என்றால் அது மிகையாகாது!
ஒருவன் தனது வாழ்வில் முன்னேறிச் செல்கின்றபோது இன்னொருவன் அதனைப் பார்த்துப் பொறாமைக் கொள்ளக் கூடியவனாகவும் அவனது முன்னேற்றத்தை தடைச் செய்வதற்கும் முயற்சிக்கின்றான். இதனால், மேற்கண்ட நபிமொழியில் கூறப்பட்ட, இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்தை பின்பற்றாததால், தான் விரும்பக்கூடிய, ‘வாழ்க்கையில் முன்னேறுவதை’ இன்னொரு சகோதரனும் அடைவதை விரும்பாததால், அவன் துன்பப்படுவதைக் கண்டு இவன் இன்பமடைவதால் அங்கு பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன. இதனால் தான் ஒரு பிரச்சனையின் ஆரம்பத்தையே இஸ்லாம் தடுத்து சகோதரத்துவத்தை விரும்பக்கூடிய விசயங்களை ஊக்குவிக்கின்றது.
(3) எப்படிப்பட்ட விசயங்களுக்காக சகோதரத்துவ நட்பு வைக்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுத்தருகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்காகவே ஒருவனை வெறுத்து நடங்கள்’ (ஆதாரம் : அஹ்மத்)
அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்வதென்றால், நேசிப்பதென்றால் என்ன?
ஒன்றாகப் பழகும் சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கக்கூடியவாறு நல்லுபதேசங்களைச் செய்துகொள்ள வேண்டும்.  இவ்வாறு நட்பாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்கின்றபோது வணக்கவழிபாடுகளைப் புறக்கணிக்கின்ற போது மற்றவர் அச்சகோதரனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவன் அவற்றை அலட்சியப்படுத்துகின்றபோது, நல்லுபதேசங்களைக் கேட்காதபோது, அவற்றை அவர் ஏற்று செயல்படுத்தும் வரை அவரை அல்லாஹ்வுக்காக வெறுத்து நடக்கவேண்டும்.
(4) இஸ்லாம் இனம், நாடு, நிறம், சாதி, மொழி ஆகியவற்றுக்கிடையே எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை! மாறாக ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவரையும் ‘முஸ்லிம்கள்’ என்றே பார்க்கின்றது. இவற்றை நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களது வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறியலாம். பிலால் (ரலி) அவர்களைப் பொருத்தவரையில் ஒரு மிகப்பெரும் குரைசிக்குலத் தலைவனுக்கு அடிமையாக வாழ்ந்தவர். மேலும் அவர் கருமை நிறமுடையவராக இருப்பதோடு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவரும் ஆவார். நபி (ஸல்) அவர்களோ அல்லது நபித்தோழர்களோ அவரை ஒருபோதும் பிரித்துப்பார்க்கவில்லை! மாறாக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சகோதரர்கள் என்றகையில் அக்கால நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒற்றுமை இருந்தது.  இதனால் இவர் அபூபக்கர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்டார்கள். உலகிலேயே இரண்டாவது தரத்தில் இருக்கின்ற அல்-மஸ்ஜிதுல் நபவியில் முஅத்தினாக இருந்தார். மக்கா வெற்றியின் போது பெரும் பெரும் நபித்தோழர்கள் மக்காவிலே இருக்கின்ற சந்தர்ப்பத்திலே யாரை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்கு அழைத்துச் செல்வார் என்று எpதிர்ப்பார்த்திருந்தபோது ஆரம்பத்திலே அடிமையாகவும், நிறத்திலே கருமையாகவும் இருந்த பிலால் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்குள்ளே அழைத்துச் சென்றார்கள். இவைகள் அனைத்துமே, இஸ்லாம் சகோதரத்துவத்திற்கு பாகுபாடு காட்டுவதில்லை என்பதையே உணர்த்துகின்றது.  இதே போன்று ஏராளமான நிகழ்வுகள் நடந்திருப்பதையும் இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது விளங்கிக்கொள்ளலாம்.
மக்களுக்கு மத்தியில் இருக்கும் குலங்களும் கோத்திரங்களும் அவர்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் அறிந்துக்கொள்வதற்காகவே என்று இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. அவர்களுக்கு மத்தியில் எவ்வித உயர்வு தாழ்வு கிடையாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.
“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 49:13)
இந்த அல்-குர்ஆன் வசனம், அல்லாஹ் மனிதனை ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து படைத்தான் என்பதன் மூலம் அனைத்துப் பாகுபாடுகளையும் ஆரம்பத்திலேயே தடுக்கின்றது. வசனத்தின் இறுதியில் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர் யார் என்பதற்கு ஒரு அளவு கோலையும் தருகின்றது. அவர்களே அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர்! அவர்கள் தான் இறையச்சமுடையவர்கள். தற்போது உலகில் பெரும் பிரச்சனையாக கருப்பர், வெள்ளையர் பிரச்சனை இருப்பதை தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் அறியலாம். அதே போன்று சாதிப்பிரச்சனைகள் இந்தியாவில் பல இயங்களிலும் இது ஊடுருவி இருப்பதை பார்க்கலாம். இவைகள் அனைத்துக்கும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
‘அரபிக்கும் அஜமிக்கும், அஜமிக்கும் அரபிக்கும் மத்தியிலும் கருப்பனுக்கும் வெள்ளையனுக்கும் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும் மத்தியிலும் வித்தியாசங்கள் கிடையாது. அனைவருமே ஆதமில் இருந்து வந்தவர்கள்; ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர்’ (ஆதாரம் : அஹ்மத்)
இவ்வாறாக இன, நிற, இட, தேச, மொழி என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் இஸ்லாம் சகோதரத்துவத்தை முக்கியப்படுத்தி வலியுறுத்துவதை அறியலாம்.

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

குர்ஆனின் பெயர்கள்


“குர்ஆன்” என்று பதினைந்து இடங்களிலும், “அல் குர்ஆன்” என்று ஐம்பது இடங்களிலும், குர்ஆன் மஜீதில் திருக் குர்ஆன் பெயரை அல்லாஹ் கூறுகிறான். இன்னும் பல பெயர்களிலும் இது திருமறையில் குறிப்பிடப்படுகிறது. அப்பெயர்கள் வருமாறு:

எண்குர்ஆனின் பெயர்கள்வசன
எண்
1அல் கிதாப் (திருவேதம்)2:2
2அல் பயான் (தெளிவான விளக்கம்)3:138
3அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி)4:174
4அல்ஃபுர்கான்2:185
5அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது)3:58
6அந் நூர் (பேரொளி)4:174
7அல் ஹக்கு (மெய்யானது)2:91
8அல் கரீம் (கண்ணியமானது)56:77
9அல் முபீன் (தெளிவானது)5:17
10அல் ஹகீம் (ஞானம் மிக்கது)36:2
11அல் அஜீஸ் (சங்கையானது வல்லமையுடையது)41:41
12அல் ஹுதா (நேர் வழிகாட்டி)3:138
13அர் ரஹ்மத் (அருள்)6:157
14அஷ் ஷிஃபா (அருமருந்து)10:57
15அல் மவ்இளத் (நற்போதனை)3:138
16அல் ஹிக்மத் (ஞானம் நிறைந்தது)2:151
17அல் முஹைமின் (பாதுகாப்பது)5:48
18அல் கய்யிம் (உறுதியானது நிலைபெற்றது)2:151
19அந் நிஃமத் (அருட்கொடை)93:11
20அர் ரூஹ் (ஆன்மா)42:52
21அத் தன்ஸீல் (இறக்கியருளப் பெற்றது)20:4
22அல் ஹுக்மு (சட்ட திட்டங்கள்)13:37
23அல் முபாரக் (நல்லாசிகள்)6:92
24அல் முஸத்திக் (முன்னர் வந்த இறை வேதங்களை மெய்ப்பிப்பது)6:92
25அல் பஷீர் (நன்மாராயங் கூறுவது)41:4
26அந் நதீர் (அச்சமூட்டி எச்சரிப்பது)41:4
27அல் முதஹ்ஹர் (பரிசுத்தமானது)80:14
28அல் முகர்ராமா (சங்கையானது)80:13
29அல் மஜீத் (கண்ணியம் மிக்கது)50:1
30அல் அரபிய்யு (அரபி மொழியிலுள்ளது)12:2
31அல் மர்ஃபூஆ (உயர்வானது)80:14
32அல் அஜப் (ஆச்சரியமானது)72:1
33அல் பஸாயிர் (அறிவொளி)7:203
34அல் திக்ரா (நல்லுபபேதசம்)7:2
35ஹப்லுல்லாஹ் (அல்லாஹ்வின் கயிறு)3:103

சனி, 29 ஜனவரி, 2011

‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?’


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?’ என்று கேட்டார்.
அவர்கள், ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.
‘இறைத்தூதர் அவர்களே!’ ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்ன?’ என்று அவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸக்காத்’ தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்’ என்றார்கள்.

அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! ‘இஹ்ஸான்’ (நன்மை புரிதல் என்றால் என்ன?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)’ என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை (நாள்) எப்போது வரும்?’ என்று கேட்கஇ நபி(ஸல்) அவர்கள், ‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்,) கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்க மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறேன்:
ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும். ‘நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். இன்னும், அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகிறான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்’ (எனும் 31:34 வது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார்.
நபி(ஸல்) அவர்கள் ‘அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்!’ என்று கூறினார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்து வரச் சென்றார்கள். எங்கேயும் காணவில்லை. பின்னர், நபி(ஸல்) அவர்கள் ‘இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) (ரலி), ஆதாரம் : புகாரி
ஈமான் என்றால் என்ன?
1) அல்லாஹ் (இறைவன்) ஒருவனே என்றும் அவனே அல்லாஹ் ஸூப்ஹானத்த்ஆலா
2) அல்லாஹ்வின் படைப்பினங்களான மலக்குள் மீதும்
3) அல்லாஹ்வின் தூதர்கள் மீதும்
4) அந்த தூதர்களுக்கு இறைவன் வேதங்களை அருளினான் என்றும்
5)மறுமையை நம்புவதும் (அதாவது நியயத்தீர்ப்பு நாள், சுவர்க்கம் மற்றும் நரகம் இவற்றை நம்புதல்)
6) இறைவன் விதித்திருக்கின்ற விதியின் மீதும்
ஆகியவைகளை நம்பிக்கைக் கொள்வதற்கு ‘ஈமான்’ என்று பெயர்.
மேலே குறிப்பிடப்பற்றுள்ளவைகளில் எதில் ஒன்றிலாவது யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர் முழுமையாக ஈமான் கொண்டவராக மாட்டார்.
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்ற வார்த்தைக்கு ‘ஒருவர் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை முழுமையாக இறைவனுக்கு அர்பணித்தல்’ மற்றும் அமைதி என்று பொருளாகும்.
இஸ்லாம் என்பது பின்வரும் அடிப்படை விஷயங்களில் அமைந்ததாகும்.
1) வணங்கப்படுவதற்கு தகுதியுடைய இறைவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை என்றும் முஸம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதி தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் என்றும் மனதால் நம்பிக்கைக் கொண்டு வாயால் உறுதி மொழிவதாகும்.
2) குறிப்பிட்ட நேரங்களில் ஐங்காலத் தொழுகைகளை நிறைவேற்றுதல்
3)ரமலானில் நோன்பு நோற்பது
4) வருடாந்திர ஜக்காத் செலுத்துவுது
5) வசதியுள்ளவர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறை ஹஜ் செய்வது
எனவே,
ஈமான் என்பது: - ஒருவர் உள்ளத்தால் மேலே குறிப்படப்பட்ட ஆறு விஷயங்களில் நம்பிக்கைக் கொள்வதும்
இஸ்லாம் என்பது: -அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக ஒருவரின் சொல் செயல்கள் அமைந்து அதன்படி ஐந்து கடமைகளை நிறைவேற்றுதலாகும்.

வியாழன், 27 ஜனவரி, 2011

‘முகஸ்துதி"


அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உரித்தானவர்களாக அவனையே வணங்க வேண்டும் என்றே அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள்’ (அல்-குர்ஆன் 98:5)
அன்பு சகோதர, சகோதரிகளே! இந்த வசனத்தை நாம் நன்கு சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். தொழுகை, ஜக்காத், ஹஜ் முதற்கொண்டு நாம் செய்யக்கூடிய அனைத்து அமல்ககளும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முக்கிய இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன. அவைகள்:
  1. நாம் செய்யும் அமல்கள் அல்லாஹ்வுக்காகவே என்ற இஃக்லாஸ்
  2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் செய்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும்’ அறிவிப்பவர்: உமர் (ரலி), ஆதாரம்: புகாரி
நாம் செய்கின்ற எந்த ஒரு அமலாக இருந்தாலும் அதில் அல்லாஹ்வுக்காகவே என்ற எண்ணம் இல்லாமல் இருந்தால் அல்லது அந்த எண்ணத்தில் களங்கம் ஏற்படுமாயின் அந்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது மட்டுமல்லாமல் அதன் மூலம் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்கு கேடுதான். அவர்கள் பிறருக்கு காட்டுவதற்காகத் தொழுகின்றனர். அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர்’ (107-4-7)
இந்த வசனத்தில் தொழாமல் இருப்பவர்களைப் பற்றிக் கூறவில்லை! மாறாக பிறரிடம் தாம் தொழுகையாளி எனக் காண்பிப்பதற்காகத் தொழுபவர்களைப் பற்றி எச்சரிக்கை செய்கின்றான். இந்த வசனத்திலிருந்து நாம் பல படிப்பினைகளைப் பெறலாம்.  நாம் செய்யக் கூடிய அனைத்து செயல்களையும் இந்த வசனத்தைக் கொண்டு நாம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
தம்மை பிறர் பார்த்து இவர், ‘சிறந்த தொழுகையாளி, நோன்பாளி அல்லது கொடைவள்ளல்’ என்று போற்றுவதற்காக ஒருவர்  அமல்களைச் செய்வாராயின் அவற்றைக் கொண்டு மறுமையில் எவ்விதப் பயனும் அவருக்கு ஏற்படப்போவதில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ‘தஜ்ஜாலை விட உங்களின் மீது நான் மிகவும் பயப்படக்கூடிய ஒன்றை அறிவிக்கட்டுமா?’ எனக் கேட்டார்கள். நாங்கள் அறிவியுங்கள் என்றோம். அதற்கு அவர்கள், ‘அது மறைமுகமான ஷிர்க் ஆகும். அதாவது ஒருவர் தொழுவதற்காக நிற்கிறார், அப்போது அவரை வேறொருவர் பார்க்கிறார் என்பதற்காக அத்தொழுகையை அவர் அழகுறச் செய்வதாகும்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத்  (ரலி), ஆதாரம்: இப்னுமாஜா.
இன்று பெயருக்கும், புகழுக்கும் அடிமையான நம்மில் சிலர் மிகுந்த சிரமங்களுக்கிடையே பொதுமக்களுக்கு நன்மை பயக்கின்ற வகையினிலே பல நற்காரியங்களைச் செய்கின்ற வேளையிலே தங்களின் பெயர்களை முன்னிருத்தி அவற்றை தம்பட்டம் அடிக்கின்றதை பார்க்கின்றோம். மக்களுக்காகச் செய்யப்படுகின்ற இத்தகைய நற்கருமங்கள், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற வேண்டுமென்பதல்லாமல் மக்களிடம் புகழ்பெற வேண்டும்; அதன் மூலம் தாம் வளரவேண்டும் என்று எண்ணத்தில் செய்யப்படுமானால், இது மிகவும் வருத்தத்திற்குரியது! நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும் நம் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிகின்றவனாக இருக்கின்றான் என்பதை நாம் ஒருகணமேனும் மறந்துவிடலாகாது.
அல்லாஹ் கூறுகின்றான்:
“(நபியே) நீர் கூறுவீராக! உங்களின் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் மறைத்தாலோ வெளிப்படுத்தினாலோ அதை அல்லாஹ் அறிகிறான்” (3:29)
அல்லாஹ்வுக்காக என்றில்லாமல் பிறர் தம்மைப் புகழ வேண்டும் என்பதற்காக ஒருவர் ஒரு செயலைச் செய்தால் அது ‘முகஸ்துதி’ என்றழைக்கப்படுகின்ற மறைமுக ஷிர்க் என்பதை நாம் உணர்ந்துக் கொண்டு அதிலிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் தவிர்ந்து இருக்கவேண்டும். அது போல அழைப்புப் பணியில் ஈடுபடுவோரும் தம்முடைய செயல்களை அல்லாஹ்வுக்காகவே என்று ஆக்கிக்கொள்ள வேண்டும். எத்தகைய காரணத்தைக் கொண்டும் ஷைத்தானின் வலையில் விழுந்துவிடக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சந்தேகமில்லாத மறுமை நாளில் முன்னோர், பின்னோர் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்க்கும் போது அறிவிப்புச் செய்பவர், ‘எவர் அல்லாஹ்வுக்காகச் செய்த ஒரு செயலில் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்தாரோ அவர் அதற்குரிய கூலியை அல்லாஹ் அல்லாதவரிடம் வேண்டிக் கொள்ளட்டும். ஏனெனில் இணைவைப்போரின் இணைவைப்பை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்’ என அறிவிப்புச் செய்வார். அறிவிப்பவர்: அபூசயீது பின் ஃபளாலா, ஆதாரம்: இப்னுமாஜா.
எனவே, அன்பு சகோதர, சகோதரிகளே! நாம் மிகுந்த சிரமங்களுக்கிடையே கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த செல்வங்களைக் கொண்டும், நமது பொண்ணான நேரத்தையும் செலவிட்டு செய்கின்ற அமல்களில் இவ்வுலக புகழை விரும்பாமல் அல்லாஹ்வுக்காகவே, அவனுடைய திருப்பொருத்தத்திற்காகவே என்பதாக நமது எண்ணங்களை ஆக்கிக் கொண்டு அதன்படி செயலாற்றக் கூடியவர்களாக நாம் மாறவேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். வந்தவர், ‘(மறுமையில்) கூலியையும், (இவ்வுலகில்) புகழையும் எதிர்பார்த்துப் போரிடும் மனிதனைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டார்.
‘அவனுக்கு ஒன்றுமே கிடைக்காது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மீண்டும் மீண்டும் மூன்று முறை அதையே அவர் கேட்டார். ஒவ்வொரு முறையும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் அளித்தார்கள். பிறகு கூறினார்கள்: ‘தனக்காக மட்டுமே செய்யப்படும் அமலையும், தன்னுடைய திருமுகத்தை மனதிற்கொண்டு செய்யப்பட்ட அமலையும் மட்டுமே அல்லாஹ் ஒப்புக்கொள்வான்’ அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி), ஆதாரம்: அபூதாவுது, நஸயீ.
நம்முடைய அமல்களை அல்லாஹ்வுக்கே உரித்தானவைகளாக ஆக்கி  அவனை மட்டுமே வணங்கக்கூடியவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாகவும். ஆமீன்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

சகுனம் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள்:


அல்லாஹ்வின் திருப் பெயரால்
மனித வரலாற்றில் சகுனம் தொடர்ந்தேர்ச்சியான ஒரு தொற்று நோயாகவே காணப்படுகின்றது. அதனை வைத்து சிலர் வயிறு வளர்ப்பதையும் நாட்டு நடப்புக்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன. அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த நவீன யுகத்திலும் படித்தவர்கள், பாமரர்கள் என வேறுபாடின்றி அனைவரும் சாத்தானிய சகுனத்தின் சாக்கடை வெள்ளத்தில் அடிபட்டுச் செல்பவர்களாகவே இருக்கின்றனர்.
எனவே எமது சமூகத்தின் நன்மை கருதி சகுனத்தின் உண்மை நிலைப்பாட்டையும், அதனால் ஏற்படும் தீமைகளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். படித்து பயன் பெற வேண்டும் என்பதே எங்கள் அவா!
‘சகுனம்’ என்பதற்கு அரபியில் ‘ததய்யுர்’ எனப்படும். இது ‘தய்ர்’ எனும் பெயர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். பறவைக்கு அரபியில் ‘தய்ர்’ என்பர்.
இதற்கான காரணத்தை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: -
அன்றைய அறியாமைக் கால மக்கள் ஒரு பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது பறவைகளை பறக்கச் செய்து அது பறக்கும் திசைக் கேற்ப அப்பிரயாணத்தின் முடிவைத் தீர்மானிப்பார்கள். அதாவது அப்பறவை வலப்புரம் பறந்தால் அதனை நற்சகுனமாகக் கருதி பிரயாணத்தைத் தொடர்பவர்களாகவும், அது இடப்புறம் பறந்தால் அது துர்ச்சகுனம் என்று ஆரம்பித்த பிரயாணத்தை நிறுத்தக் கூடியவர்களாகவும் இருந்தனர். எனவே அக்காலத்தில் பறவையை வைத்து சகுனம் பார்த்ததால் ‘ததய்யுர்’ என சகுனத்திற்கு பெயர் வந்தது.
இது அக்காலத்தில் வழக்கிலிருந்த சகுனமாகும். இன்று நமது நாட்டு மக்களைப் பொறுத்த வரை பல முறைகளில் சகுனம் பார்க்கிறார்கள். உதாரணமாக:
பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது, பூனை, வெற்றுக் குடம் சுமந்த பெண், விதவைப் பெண், கூன் குருடு போன்றோர் குறுக்கருத்தால் இதனை கெட்ட சகுனமாக கருதி ஆரம்பித்த பயணத்தை நிறுத்தி விடுதல்.
இராக் காலங்களில் யாராவது வீட்டில் ஆந்தை கத்தினால் இது கெட்ட சகுனம் எனக் கருதி அதனை விரட்டி விடுவார்கள். அதை விரட்டுவதற்கு அவர்கள் கையாளும் முறை அவர்களது நம்பிக்கையை விட அபத்தமாக இருக்கும். சிலர் ஆந்தையை விரட்ட எரியும் அடுப்பில் உப்பை போடுவார்கள். சிலர் எரியும் அடுப்பில் அடுப்பூதும் குழலை சூடேற்றுவார்கள் அப்படிச் செய்தால் அது பறந்து விடும் என்பது அவர்களது ஐதீகம்!
சிலர் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய நாடும்போது பல்லி கத்திவிட்டால் இவ்விடயத்தில் ஏதோ தீங்கு இருக்கின்றது எனக் கருதி அதை கைவிட்டு விடுவார்கள். அதனால் தான் தமிழில் கூட பல்லி கத்தும் என்று கூறாமல், பல்லி சொல்லும் என்பர். சகுனம் தமிழ் மொழியைக் கூட விட்டுவைக்கவில்லை!
  • சிலரது வீட்டில் பகற் நேரங்களில் தொடராக காகம் கறைந்தால் யாரோ வீட்டிற்கு விருந்தாளிகள் வரப் போகிறார்கள் என்று எண்ணுதல். காகம் கூடக் கறையக் கூடாதா?
  • வீட்டில் வளர்க்கும் புறா பறந்து சென்றுவிட்டால் பரக்கத்தும் பறந்து போய்விடும் என்று நினைத்தல்!
  • சிட்டுக் குருவி – ஊர்க் குருவி வீட்டில் கூடு கட்டினால் பரகத் கொட்டும் என எண்ணுதல்!
  • பயணத்தின் போது ட்ரஃபிக் சிக்னல் தொடராக மூன்றும் சிகப்பில் காணப்பட்டால் பிரயாணத்தில் தடை இருப்பதாக நினைத்தல்.
பார்த்தீர்களா நவீன கண்டு பிடிப்புகளைக் கூட மூட நம்பிக்கையினால் பினைத்துப் போடுகிறார்கள்!
  • வீட்டிலோ தொழில் நிறுவனங்களிலோ அசோக் மரம் நாட்டினால் துக்கம் சூழ்ந்து கொள்ளும் என நம்புதல். காரணம் அந்த மரத்தின் கிளைகள் எப்போதும் கீழ் நோக்கியே இருக்கும், அது சோகமாக காட்சி தருவது போன்று தெரிவதாக நினைத்து வீட்டிலும் சோகம் ஏற்படும் என்பது அவர்களது நம்பிக்கை!
  • சிலர் சில இலக்கங்களை ராசியான இலக்கங்களாகக் கருதுதல். உதாரணமாக: 13, 786 போன்றவற்றைக் கூறலாம்.
இப்படி நாட்டிற்க்கு ஏற்ப, இடத்திற்கு ஏற்ப, சமூகங்களுக்கு ஏற்ப சகுன முறைகளும், நம்பிக்கைகளும் வித்தியாசப்படுகின்றன. அதே போன்று சிலர் எந்த ஒன்றைச் செய்வதாக இருந்தாலும் நல்ல நேரம்இ சுப நேரம் பார்த்துத் தான் அதனை ஆரம்பிப்பார்கள்.
இந்துக்களால் வெளியிடப்படும் லீலா பஞ்சாங்க சித்திரக் கலண்டர், ராசி பலன் இவற்றையே நம்பி அவற்றில் மூழ்கி தமது வாழ்க்கையின் வளத்தை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது வெரும் காலத்தைக் கடத்தும் ஒரு செயல். மற்றும் வெறும் போலித்தனமான செயல் என்பதற்கு நாம் நாளாந்தம் காணும் செய்திகள் ஒரு எடுத்துக் காட்டாகும்.
உதாரணமாக, இருவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யும் போது ராசி பலன், ஜாதகப் பொருத்தம், சனி கிரகம், செவ்வாய் கிரகம் போன்றன இருக்கிறதா? என்றெல்லாம் பார்த்து, தோஷங்கள் இருந்தால் அவற்றிற்கு பரிகாரமெல்லாம் செய்து, பல நல்லோர்கள் என கருதப்படுபவர்களின் ஆசிர்வாதங்களோடு, கெட்டிமேளம் கொட்டி ஒரு திருமணம் சிறப்பாக நடந்தேரும். அடுத்த நாள் காலையில் தினப் பத்திரிக்கையைத் திறந்தால் நேற்று திருமண மண்டபத்திலிருந்து வீடு திரும்பிய புதுமணத் தம்பதிகள் வாகன விபத்தில் மரணம்! எனும் திடீர் தகவலை கொட்டெழுத்துக்களில் வெளியிட்டிருப்பார்கள். இது எதனைக் காட்டுகிறது. இது வரைக்கும் இவர்கள் செய்த சடங்கு சம்பிரதாயம், சகுனம் அனைத்தும் வெறும் போலி என்பதை இவர்கள் புரிந்து கொள்ளாத போது இறைவன் இப்படிச் சம்பவங்களை நிகழ்த்திக் காட்டுகிறான்.
இது இப்படியிருக்க காதலித்து கலப்பு திருமணம் செய்பவர்கள், ஓடிப் போய் பதிவுத் திருமணம் செய்து தம்பதியினராக வாழ்பவர்களுக்கு இந்த சடங்கு சமபிரதாயங்கள் பதில் கூறட்டும்.ஆக சகுனம் பார்த்தல், உலகில் மடமையை அதிகரிக்கச் செய்யும், மறுமையில் தண்டனையைத் தான் பெற்றுத் தரவல்லது. சுருங்கக் கூறின், சகுனம் இணைவைப்புக்கான வாயிலாகும்.
இமாம் இப்னுல் கையும் கூறுகிறார்கள்: -
‘சகுணமானது அதை நம்பக் கூடியவனையும் அதற்குப் பயப்படக் கூடியவனையும் தான் பாதிக்கும். ஆனால் யார் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லையோ அவனை ஒரு பொழுதும் பாதிக்காது’.
சகுனம் பார்த்து தமது முன்னேற்றத்தைத் தடுத்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. வெறும் பித்தலாட்டம் மட்டும் தான்.
சகுனமாகக் கருதக் கூடிய ஒன்றைப் பார்க்க நேர்ந்தால் அல்லது கண்டால் என்ன கூற வேண்டும்?

(اللهم لا طير إلا طيرك ولا خير إلا خيرك ولا إله غيرك)

(اللهم لايأتي بالحسنات إلا أنت ولا يذهب بالسيئات إلا انت ولا حول ولا قوة إلا بك)

பொருள்: ‘இறைவா! உனது சகுனத்தைத் தவிர வேறு சகுனம் கிடையாது. உன நலவைத் தவிர வேறு நலவு கிடையாது. உன்னைத் தவிர வேறு நாயனில்லை’. (ஆதாரம்: அஹ்மத்).
மேலும் ‘இறைவா! உன்னைத் தவிர நன்மைகளைத் தருபவன் வேறுயாருமில்லை. தீமைகளைப் போக்குபவனும் உன்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. உன்னைத் தவிர வேறு எந்த சக்திகளும் எம்மைச் சூழ இல்லை’ என்று கூறுமாறு நபியவர்கள் எம்மைப் பணித்துள்ளார்கள்.
சகுனம் பற்றிய சட்டம்: -
சகுனத்தை மையமாகக் கொண்டு பிரயாணத்தை விடுவது பெரும் பாவமாகும் என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
‘சகுனம் பார்ப்பது இணைவைப்பாகும், சகுனம் பார்ப்பது இணைவைப்பாகும்’ என நபியவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார்கள். (ஆதாரம்: திர்மிதி)
சகுனத்தை வெறுத்து ஒதுங்குவதனால் அது அவனை சுவனத்திற்கு இட்டுச் செல்லும் என்பது நபி மொழிகளில் இருந்து தெரிய வருகின்றது. நாளை மறுமையில் எந்த விதக் கேள்வி கணக்கோ, தண்டனையோ இன்றி சுவர்க்கம் நுழைபவர்கள் எழுபதுனாயிரம் பேர்களாவர். ‘அவர்கள் யாரென்றால், மந்திரிக்காதவர்கள், மந்திரிக்குமாறு யாரையும் பனிக்காதவர்கள், சகுனம் பார்க்காதவர்கள் மற்றும் அல்லாஹ்வையே (எப்போதும்) சார்ந்திருப்பவர்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
தாவுஸ் என்ற அறிஞர் தனது தோழருடன் ஒரு பிரயாணத்தில் இருக்கும் போது ஒரு காகம் கறைந்து கொண்டு அவர்களைக் கடந்து சென்றது. அதற்கு தோழர், நல்லது நடக்கட்டும் என்றார். இதனைக் கேட்ட தாவுஸ் அவர்கள்: அதனிடத்தில் என்ன நலவு இருக்கிறது! அல்லாஹ் மீது சத்தியமாகச் சொல்கிறேன் என்னுடன் பயணத்தைத் தொடரவேண்டாம் என்றார்கள்.
சகுனம் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள்: -
சகுனம் பார்ப்பதால் ஏராளமான தீமைகள் ஏற்படுகின்றன. அவற்றில் சிலதை மட்டும் இங்கு தருகிறோம்.
  • எமது இறை விசுவாசத்திற்கு நேர் எதிரானது
  • தவக்குல் எனும் அல்லாஹ்வைச் சார்ந்திருத்தலை தடுக்கின்றது
  • ஒரு நன்மையை தரவோ அல்லது ஒரு தீமையைத் தடுக்கவோ முடியாதது
  • சிந்திக்கும் திறன் இல்லாமைக்கு சான்றாக அமைகிறது
  • மனக் குழப்பத்தை தொடர்ந்தும் உண்டாக்கவல்லது
  • வாழ்க்கையில் தோழ்வியை தரக் கூடியது
  • அறியாமைக் கால மக்களின் பண்புகளில் ஒன்று
  • நன்மையோ, தீமையோ அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது எனும் விதியை நிராகரிக்க விடுக்கப்படும் ஒரு பகிரங்க அழைப்பு
  • நபிகளாரின் போதனைக்கு முரண்படுதல்
  • அடிப்படைகளற்ற விடயங்களை முற்படுத்தி அவற்றிற்கு அடிமைகளாக்குகின்றது!
  • சகுனம், சாத்திரம், சடங்கு, சம்பிரதாயம், ஜோதிடம், ராசி-பலன்… போன்ற மூட நம்பிக்கைகளில் தமது காலத்தை வீணடிக்கும் சமூகங்கள் இன்று வரைக்கும் முன்னேராமல் பின்தங்கியிருப்பதையும், இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளே தெரியாத மேற்கத்தியர் நன்றாக முன்னேறிக் கொண்டு செல்வதையும் பாருங்கள். இப்போதாவது சிந்திப்போமாக!
இது சகுனம் பற்றிய சுருக்கமான ஒரு அலசலாகும். இதன் பிறகும் கண்டதையெல்லாம் சகுனத்திற்கு உற்படுத்தி நம் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாமல் இத்தீமையிலிருந்து விலகி நடக்க வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள்பாலிப்பானாக!

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

மறுமை நாளின் அடையாளங்கள்


இஸ்லாமிய அரசியல்


மௌலவி இஸ்மாயில் ஸலபி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளிக் காசையோ, தங்கக் காசையோ), அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளைக் கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும் தர்மமாக வழங்கிச் சென்ற ஒரு நிலத்தையுமே அவர்கள் விட்டுச் சென்றார்கள்’ அறிவிப்பவர்: ஜுவைரியா பின்த் ஹாரிஸ் (ரலி) நூல்: புகாரி 2739, 2839, 2912, 3098, 4461
பத்து ஆண்டுகள் பேரரசராக ஆட்சி புரிந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்களின் பெயர்ப்பட்டியலையே இந்த ஹதீஸ் எமக்குத் தெளிவு படுத்து கின்றது.
ஆட்சியதிகாரம், நிர்வாகப் பொறுப்புகள், பதவி பட்டங்கள் என்பன அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட அமானிதங்கள், ஆதலால் அவற்றை உரிய முறையில் நிறைவேற்றுவது அவசியமாகின்றது. அவற்றைத் துஷ்பிரயோகம் செய்த நிலையில் மரணிப்போரின் மறுமை நிலையோ மகா பயங்கரமாகவே இருக்கும். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தார்கள்.
‘நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148
அல்லாஹ்வின் தூதரே! என்னை நீங்கள் பதவிக்கு நியமிக்க மாட்டீர்களா? என்று நான் கேட்ட போது அவர்கள் தன் கையால் என் தோளைத் தட்டி விட்டு ‘அபூதர்ரே! நீ பலவீனமானவன். ஆனால் பதவி (அதிகாரம்) என்பதோ அமானிதமாக இருக்கிறது. யார் அப்பதவிக்கு வந்து பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுகிறாரோ அவர் தவிர ஏனையோருக்கு அது இழிவையும் வருத்தத்தையுமே கொடுக்கும்’ எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 1825)
பாராளுமன்ற, மாகாண, நகர, உள்ளூராட்சி போன்ற தேர்தல்களுக்காக இலட்சக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொட்டி அக்கிரமம், அநியாயம், அச்சுறுத்தல் போன்ற அசுத்தங்களிலும் ஈடுபட்டு இஸ்லாமிய நெறிமுறைகள் எதையுமே பேணாது, எப்படியும் வெற்றி பெற்று உலக சுகபோகங்களில் திளைக்க வேண்டுமென்ற மோகத்தில் பலர் அரசியலில் ஈடுபட்டிருக்கும் இக்காலத்தில் தான் நபி(ஸல்) அவர்கள் தமது பாசறையில் வளர்த்த உத்தமர் ஒருவர் சமுதாய நலனை மாத்திரமே கருத்திற் கொண்டு பதவி கேட்டதற்கு மேற்கண்டவாறு உபதேசிக்கிறார்கள். இது அண்ணலாரின் அரசியல் ஆளுமையையே காட்டுகிறது.
இஸ்லாமியக் கடமைகள், ஒழுக்கம் மற்றும் பண்பாட்டுப் போதனைகள், நடத்தை சார்ந்த விஷயங்கள் போன்ற துறைகளில் வழி காட்டிய அண்ணல் நபி(ஸல்) அவர்கள், தன்னை ஒரு ஆன்மீகவாதியாக அடையாளப்படுத்திய அதே நேரம் தான் ஒரு முன்மாதிரி மிக்க அரசியல்வாதி என்பதையும் நிரூபித்து விட்டே சென்றிருக்கிறார்கள். தனக்கிருந்த ஆன்மீகப் பலத்தை வைத்து அரசியல் இலாபம் பெற அவர்கள் ஒரு போதும் முற்படவில்லை என்பதை நாம் விளக்க முற்பட்டுள்ள ஹதீஸை நடுநிலையோடு சிந்திக்கும் எவரும் விளங்கிக் கொள்ளலாம்.
ஒரு முஸ்லிம் அரசியல்வாதியைப் பொறுத்தவரை தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுடன் இதய சுத்தியுடனேயே நடந்து கொள்ள வேண்டும். மக்கள் நலனையே மையப்படுத்தி மறுமை விமோசனததிற்கான சீர்திருத்தப் பணிகளையே அவர் முன்னெடுக்க வேண்டும். அபிவிருத்தி நிமித்தம் பெறும் நிதிகளில் சுயலாபம் பெறுவதோ, அவற்றை துஷ்பிரயோகங்களில் ஈடுபடுத்துவதோ கூடாது. இலஞ்சம், ஊழல், மோசடி போன்ற தீய விவகாரங்களை விட்டும் அவர் முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய மார்க்க விழுமியங்கள் பேணப்பட்டதாகவே அண்ணலாரின் அரசியல் வாழ்வு அமைந்திருந்தது.
இன்று எமது அரசியல்வாதிகளில் பலர் அதிகாரத்தைத் தமது சுயநலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதைக் காண்கிறோம். தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் சொத்துக்கள் வாங்கிக் குவித்தல், அறுசுவை உணவுகளுடனும், அரண்மனை வாசத்துடனும் சொகுசு வாழ்வு மேற்கொள்ளல், ஆடம்பரப் பொருட்கள் பாவனை, அதிவுயர் உடைகள், மற்றும் குளிரூட்டப்பட்ட வாகன வசதிகள் ஏற்பாடு என அவர்களது ஆடம்பரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இதனால்தான் அரசியல்வாதிகள், அரசு நிர்வாகிகள் போன்றோரின் அதிகார துஷ்பிரயோகங்களால் ஏற்படும் இலஞ்ச ஊழல்களை விசாரிக்கவென ‘இலஞ்ச ஊழல் ஆணைக் குழு’ என்றொரு திணைக்களம் அரசாங்கத்தால் ஏற்படுத்தப் பட்டிருப்பதையும் பார்க்கிறோம். ஆனால் நபி(ஸல்) அவர்களின் அரசியல் நடவடிக்கைகளோ இவை எல்லாவற்றையும் விட முற்றிலும் வித்தியாசமாகவே காணப்படுகின்றது.
எமது அரசியல்வாதிகளுக்கும் செல்வாக்கை விட பன்மடங்கு செலவாக்கே அன்று மாமன்னர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இருந்தது. நுபுவ்வத்தின் பணியை பூரணமாக நிறைவேற்றி இஸ்லாமிய மார்க்கத்தின் ஒரே ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்த மாநபி(ஸல்) அவர்கள் மக்களால் எவ்வளவு மதிக்கப்பட்டார்கள் என்பதையும் கூறத் தேவையில்லை.
நபிகளாரின் நடவடிக்கைகள் அனைத்தையும் சம்பூரணமாகப் பின்பற்றக் கூடிய தொண்டர்களையும் அவர்கள் பெற்றிருந்தார்கள். இப்படி எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீகத் தலைமையும், அசைக்க முடியாத ஆட்சித் தலைமையும் அவர்களிடம் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தி அவர்கள் பொருள் திரட்ட வில்லை. வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வில்லை. தமது பெயரிலும் தமது குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்கள் வாங்கிக் குவிக்க வில்லை. அரண்மனையுடன் கூடிய சொகுசு வாழ்கை வாழவில்லை என்பதையே நாம் விளக்க முற்பட்டுள்ள ஹதீஸ் எடுத்தியம்புகிறது.
அரசியல்வாதிகளில் பலர் இன்று தாம் பெற்றுள்ள அதிகாரத்தைத் தம்மையும், தமது குடும்பத்தையும் வளப்படுத்திக் கொள்ளவே பயன்படுத்துகின்றார்கள். அறுசுவை உணவுகளுக்கும் விதவிதமான பானங்களுக்கும் பணங்கள் பல்லாயிரக் கணக்கில் வீண்விரயமாக்கப் படுகின்றன. ஆனால், இறைவழிகாட்டலில் நின்று ஆட்சி நடத்திய அப்பேரரசர் முஹம்மத் (ஸல்) அவர்கள் உட்கொண்ட உணவைப் பார்க்கின்ற போது மிகப்பெரும் ஆச்சரியமாகவே இருக்கின்றது. அரசர்கள் உண்ட உணவுகளை அவர்கள் கண்டதில்லை. ஏன் சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் தொடர்ந்து உண்டதில்லை என்பதற்கு அவர்களின் தூய வரலாறு எமக்கு தக்க சான்றாக இருக்கின்றது.
‘எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்பு பற்ற வைக்கப் படாமலே கழிந்திருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தது. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள் அதை அருந்துவோம்’ என விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: உர்வா (ரலி), நூல்: புகாரி 2567,6459)
‘நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிராற உண்டதில்லை’ என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: புகாரி 5374)
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன். உடனே என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் வந்து இதைக் கூறினேன். ‘அதற்கவர்கள், என்னிடம் ஒரேயொரு ரொட்டித் துண்டும், சில பேசீச்சம் பழங்களும் தான் உள்ளன. அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய் விடும்’ என்றார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளர் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 3802)
‘ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டார்கள். அப்போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரைக் கண்டார்கள். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் என்ன? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்க, அவ்விருவரும் ‘பசி’ என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் எதற்காக வெளியே வந்துள்ளீர்களோ அதற்காகவே நானும் வெளியே வந்துள்ளேன்’ என்றார்கள்…(ஹதீஸ் சுருக்கம்) நூல்: முஸ்லிம் 3799)
மேற்படி ஹதீஸ்களும், இதுபோன்றே இன்றும் பல ஹதீஸ்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவோ, செல்வத்தைக் குவிக்கவோ முனையவில்லை என்பதைத் தெளிவுற விளக்குவதை அறியலாம்.
ஆன்மீக நெறியுடன் கூடிய அரசியல் பாசறையில் தன்னால் வளர்க்கப்பட்ட அதிகாரிகளிடம் கூட இலஞ்ச, ஊழல் வாடை வீசுவதையோ, மோசடிகள் இடம் பெறுவதையோ அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறவே விரும்பவில்லை. அமானித்தைப் பேணுவதில் அதிகாரிகளிடம் காட்டிய கண்டிப்பு, அன்னாரது முன்மாதிரி மிக்க அரசியல் கலாச்சாரத்தையே எடுத்துக் காட்டுவதாக இருக்கிறன்றது.
‘நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் ‘இப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்த போது ‘இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா? என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ‘ஸகாத்’ பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், மாடாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்’ என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி ‘இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) நூல்: புகாரி 2597, 6636, 6679)
தந்தைக்கிருக்கும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பிள்ளைகளும் அரசியல்வாதிகளின் நெருங்கிய உறவினர்களும் சகாக்களும் எமது மக்களின் வரிப்பணமாகிய அரசுக் கருவூலத்தில் கையாடல்கள் செய்வதும் அவற்றை வீண் சுகபோகங்களுக்காக அள்ளி இறைப்பதும் தற்கால அரசியலில் உணரப்படாத தீமைகளாகவே காட்சியளிக்கின்றன. திறை சேரிப் பணங்களின் இத்தகைய துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு அரசியல் வாதிகளின் பூரண ஒத்துழைப்பும் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், முன்மாதிரி மிகு அரசியல்வாதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திறைசேரி விடயத்தில் தன்னையும் சுத்தப்படுத்தி, தனது குடும்பத்தினரையும் எந்தளவு பாதுகாத்து இருக்கிறார்கள் என்பதை பதவிக்கு வரும் ஆட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் நிர்வாகிகளும் தம்மை ஒருமுறை சுய விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் எனும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரன் ஒருவர் அவற்றிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து ‘துப்பு துப்பு’ என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். (நூல்: புகாரி 1485, 1491, 3072)
இங்கே நபி (ஸல்) அவர்களின் பேரனாக இருந்தவர் அப்போது சிறுவயதுப் பாலகர். குழந்தைகளின் தவறுகளுக்கு இறைவனும் தண்டனை கொடுப்பதில்லை. இத்தகைய தவறுகளை மனிதர்களில் எவரும் பொருட்படுத்துவதுமில்லை. இருப்பினும் அரசுக் கருவூலம் என்பது அமானிதமாதலால் அதை எம்முறையிலும் துஷ்பிரயோகம் செய்யலாகாது என்ற நபிகளாரின் உறுதிமிகு கொள்கையே வாயில் போட்ட ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட விழுங்க விடாமல் துப்பச் செய்தமைக்கான காரணமாக இங்கே அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மாபெரும் தலைவராகத் திகழ்ந்த பெருமானார் (ஸல்) அவர்களது ஆடம்பரமில்லாத எளிமையான அரசியலுக்கும், தான், குடும்பம், உறவினர் என்ற சுயநலமில்லா நடவடிக்கைகளுக்கும் இன்னும் பல சான்றுகளை அவர்களது தூய வரலாறு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
ஒரு முறை யுத்தக் கைதிகள் பலர் பிடிபட்டிருந்தனர். அப்போது வீட்டு வேலைகள் செய்து கையில் தழும்புகளும் ஆடைகள் அழுக்கடைந்து முகம் வாடி வதங்கிய நிலையிலும் காணப்பட்ட தன்னுடைய மனைவி பாத்திமா (ரலி) அவர்களைப் பரிதாபக் கண்கொண்டு பார்த்த அலி (ரலி) அவர்கள், உன் தந்தையிடம் சென்று உனக்கொரு பணியாளைக் கேட்கலாமே! உனக்கு அது உதவியாக இருக்குமே! என வேண்ட, பெருத்த எதிர்பார்ப்புக்களுடன் தந்தையின் இல்லம் விரைகிறார்கள் பாத்திமா (ரலி) அவர்கள். அங்கு சென்று தந்தையிடம் பணியாள் கேட்ட போது நபி ஸல் அவர்கள், ‘அஹ்லுஸ் ஸுப்பா (திண்ணைத் தோழர்கள்) பட்டினியில் படுத்திருக்க உங்களுக்குப் பணியாளைத் தர என்னால் முடியாது. ஆயினும் பணியாளளை விட சிறந்த ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எனக் கேட்டு விட்டு, உறங்கும் முன்னர் சுப்ஹானல்லாஹ் 33, அல்ஹம்துலில்லாஹ் 33, அல்லாஹு அக்பர் 34 விடுத்தம் கூறுமாறு கற்றுக் கொடுத்தார்கள். இதனை அன்னையவர்களும் திருப்தியாக ஏற்றுக் கொண்டார்கள். (பார்க்க: பத்ஹுல் பாரி 6318 ஆம் ஹதீஸ் விளக்கவுரை)
பாத்திமா (ரலி) அவர்கள் யார்? பெருமானார் (ஸல்) அவர்களின் அளவில்லா அன்பிற்கும் பாசத்திற்கும் உரித்தான அன்பு மகள். சுவனத்துப் பெண்களின் தலைவி. இப்படியிருந்தும் பொதுச் சொத்துக்கள் பாவனை விடயத்தில் குடும்பத்திற்கே கொடுக்காமல் கண்டிப்புடன் அண்ணலார் அரசியல் நடாத்தியிருக்கிறார்கள் என்றால் அது பேராச்சரியம் தான்.
இன்றைய அரசியல் காலாச்சாரம் வெறுமனே உலகாதாய சிந்தனைகள் நிரம்பியதாகவே காணப்படுகின்றன. எனவே தான் அரசியல் மேதை நபி (ஸல்) அவர்களது அரசியல் நடவடிக்கைகளின் மேற்படி வெளிப்பாடுகளில் ஒரு துளியைக்கூட இன்றைய அரசியல் வாதிகளிடம் காணக்கிடைக்க முடியவில்லை. உட்பகை, அதிகாரப் போட்டி, பதவி மோகம், உட்கட்சி சண்டைகள், வன்முறைக் கலாச்சாரங்கள், சொகுசு வாழ்வு, சமூக சிந்தனையின்மை என்பன உலகாதாய சிந்தனைகளில் அவர்கள் ஊறிவிட்டனர் என்பதற்குக் கட்டியங் கூறுகின்றன.
அரசியல் பிரவேசத்தின் மூலம் அதிகாரம் பெற்று தம்மை வளப்படுத்திக் கொள்ளும் அடுத்த முக்கிய விடயமே ஆடம்பர வீடும் அதற்கான பாவனைப் பொருட்கள் ஏற்பாடுகளாகும். நன்கு வடிவமைக்கப்பட்ட வீடு, அதற்குள் அலங்கார மின் விளக்குகள் மற்றும் பல நானாவிதப் பொருட்கள் ஆகியன குறுகிய காலத்திற்குள் அரசியல் அதிகாரம் பெறுபவர் சம்பாதித்து விடுபவைகளாகும். ஆனால், பத்து ஆண்டுகள் ஆட்சி புரிந்த மாமன்னர் நபி (ஸல்) அவர்களின் அரண்மனையையும் பாவித்த தளபாடங்களையும் கொஞ்சம் நிதானமாகச் சிந்திப்போம்.
‘நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன் எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜதாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரல்களால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்துவிட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள். (நூல்: புகாரி 382, 513, 1209)
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தமது வீட்டில் தொழுவார்கள். வீட்டின் சுவர் குறைந்த உயரம் கொண்டதாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவதை நபித்தோழர்கள் காண்பார்கள்’. நூல்: புகாரி 729.
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அடையாளம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதியளித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம். அது உங்கள் உடலைப் பாதுகாக்கும் எனக் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று இளைப்பாறி விட்டுச் செல்லக் கூடிய ஒரு பயணிக்கும் அந்த மரத்திற்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவுதான் எனக்கும் இவ்வுலகத்திற்கும் உள்ளது’ எனக் கூறி நிராகரித்து விட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி), நூற்கள்: திர்மிதி 2299, இப்னுமாஜா 4099)
எனவே, பெருமானார் ஸல் அவர்களின் இஸ்லாமிய அரசியல் போக்கில் உலகாதாய சிந்தனைகள் எதுவுமே இழையோடி இருக்க வில்லை என்பதை மேற்படி விளக்கங்களிலிருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் சுயநலத்துடன் கூடிய உலகாதாய சிந்தனைகளை விட்டும் தூரமாகி இருக்கும் அரசியல்வாதிகளாலேயே இஸ்லாமிய அரசியலின் எதிர்பார்ப்புகளுக்கு செயல் வடிவமும் கொடுக்க முடியும் என்பதும் இதன் மூலம் நிரூபணமாகின்றது. நபிகளார் இதற்கு சிறந்ததோர் முன்மாதிரி! அரசியல் வாழ்வில் இணைந்திருப்போர் சுயவிசாரணையுடன் இதை மேற்கொள்வார்களேயானால் நிச்சயம் ஒரு மறுமலர்ச்சியைக் காணலாம்.

புதன், 19 ஜனவரி, 2011

786 ஆகுமா

 அடியற்கை ரமூஜுத்தீன் (சவூதிஅரேபியா)
 
முஸ்லிம்கள் எந்த ஒரு  காரியத்தையும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்றோ பிஸ்மில்லாஹி என்றோ கூறித் துவக்கவேண்டும் என்பது நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் பல பொன்மொழிகள் மூலம் நமக்கு தெரிகின்றது. இந்த முறையை இஸ்லாமியர் அனைவரும் செயல்படுத்தியும் வருகின்றனர...். பிற்காலத்தில் உலகின் பல பகுதிகளுக்கும் கடிதத் தொடர்புகள் பரவலாக்கப்பட்டன. தங்கள் கடிதங்களில் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்று எழுதினால் அதற்கு மரியாதை செய்யப்படாது. தூய்மையற்ற பலரது கைகளில் அது கிடைக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை கருத்தில்கொண்டு பிஸ்மில்லாஹ் என்று எழுதுவதற்கு சில முஸ்லிம்கள் தயங்கவும் செய்தனர். மாற்று வழி ஒன்றை யோசித்துக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு எண்ணை குறியீடாக மாற்றிக்கொள்ளும் நியூ மராலஜி என்ற முறை மேலை நாடுகளில் தோன்றி அது பல நாடுகளையும் அது ஈர்த்தபோது அதனை அடிப்படையாகக் கொண்டு பிஸ்மில்லாஹ்வில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு எண்ணை குறியீடாக ஆக்கி அதனை மொத்தமாகக்கூட்டி அந்தக் கூட்டுத் தொகையான 786ஜ பிஸ்மில்லாஹ்வுக்கு பதிலாக எழுதத் துவங்கினர். நாளடைவில் அதுவே இஸ்லாத்தின் சின்னம் என்று கருதும் அளவுக்கு மக்கள் இதயங்களில் ஆழமாக பதிந்து விட்டது. தங்களில் வீடுகளில் முகப்புச் சுவர்களிலும், திருமண அழைப்பிதழ் களிலும், துண்டுப் பிரசுரங்களிலும், சுவரொட்டிகளிலும், புத்தகங்களிலும் எழுதப்படாமல் இருப்பதில்லை என்னும் அளவுக்கு முக்கிய இடத்தை 786 பிடித்துகொண்டது. இது 786 உடைய சுருக்கமான கதை. தூய்மையற்ற பலரது கையில் கிடைக்கக்கூடும் என்பதற்காக இப்படி ஒரு மாற்று வழி தேவைதானா என்று குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஆராயும்போது இது தேவையில்லை என்ற முடிவுக்கே நாம் வரமுடியும். சுலைமான்(அலை) அவர்கள் தனது அண்டை நாட்டின் ராணிக்கு இஸ்லாத்திபால் அவளை அழைக்கும் எண்ணத்தில் கடிதம் ஒன்று எழுதுகிறார்கள். அந்த கடிதத்தின் துவக்கமாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதினார்கள் என்பதை திருக்குர்ஆனின்(27:30) என்ற வசனம் கூறுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத ஒரு பெண்ணுக்கு சுலைமான்(அலை) அவர்கள் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதியதிலிருந்து அதனை அல்லாஹ் தன் திருமறையில் எடுத்துச் சொன்னதிலிருந்து எவருக்கும் எழுதுகின்ற கடிதத்திலும் பிஸ்மில்லாஹவை எழுதலாம் என்பதை தெளிவாகின்றது. இத்தாலி நட்டின் அதிபர் கைஸருக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "திஹ்யத்துல்கலபி" என்ற சஹாபி மூலம் இஸ்லாமிய அழைப்பை அனுப்பியபோது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதச் செய்திருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம். நபித்தோழர் காலித் இப்னு வலீத் (ரழி) அவர்கள் ஈரான் நாட்டின் மன்னன் ருஸ்தம் என்பவருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்து எழுதிய கடிதத்தை "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்" என்றே துவங்கியிருந்தார்கள். (அபூவாயில்(ரலி) ஷரஹுஸ்ஸுன்னா) மேற்கூறிய இறைமறைக் கூற்றும், நபிவழியும், நபித்தோழர் வழியும் பிஸ்மில்லாஹ்வை தூய்மை யற்றவர்களுக்கு எழுதுவதனால் அதன் கண்ணியம் குறைந்துபோய்விடும் என்ற வாதத்தை நிராகரித்து விடுகின்றன. அல்லாஹ்வுக்கும், அவனது தூதர் சுலைமான்(அலை) அவர்களுக்கும், அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கும், அவர்களின் அன்புத் தோழர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களுக்கும் தெரியாத கண்ணியத்தை 786 என்று எழுதுவோர் எங்கிருந்து கற்றனர் என்பதுதான் நமக்கு தெரியவில்லை. ஒரு முஸ்லிமை சந்திக்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் கூறவேண்டும் என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும். எழுத்து மூலமாக ஸலாம் கூறவேண்டி வரும்போது அதனையும் எண் 632 என்று ஏன் எழுதுவதில்லை? 786 என்ற எண் பிஸ்மில்லாஹ்வுக்கு மட்டும் தான் வரும் என்பதில்லை. இன்னும் எத்தனையோ சொற்றொடர்களுக்கு இந்த எண்வரும் அவற்றில் சில விபரீதமான பொருள் தரக்கூடியதாகக் கூட இருக்கலாம். தாயத்து, தட்டு வியாபாரிகள் இதற்கு வக்காலத்து வாங்கினாலும் நபிவழி செல்வோர் இதனை தவிர்த்து, பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதை முழுமையாக எழுதவேண்டும். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதை சுருக்கமான முறையில் 786 என்று சொல்கிறோம் என்று கூறுபவர்கள் ஏன் அவரவர் தங்கள் பெயரை ஏன் முழுமையாக எழுத வேண்டும். அதற்கு உரிய எண்களைக்கூட்டி கைதிகளுக்கு உள்ளதுபோல் ஏன் எண் வடிவில் எழுதக்கூடாது? ஏனெனில் அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான் போன்ற பெயர்களை அப்படியே எழுதும்போது அந்தப் பெயர்களிலும் அல்லாஹ்வுடைய பெயர் இருக்கத்தானே செய்கிறது! அதற்கும் எண்களைக் குறிப்பிட்டுக் கொள்வதுதானே பொருத்தமானது ஏன் செய்யவில்லை? சிலர் 786 என்று எழுதும்போது எங்கள் எண்ணத்தில் பிஸ்மில்லா இருக்கின்றது எனவே எழுதலாம் என்கின்றனர். அப்படி எழுதவேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது என்பது நமது முதல் கேள்வி? 247336 என்று ஒருவன் எழுதிவிட்டு எனது எண்ணத்தில் "பகரா" சூரா உள்ளது, அதற்கான நன்மை எனக்குக் கிடைத்துவிடும் என்றால் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மை தரக்கூடிய ஒரு சொல்லை என்ன அவசியத்துக்காக சுருக்கவேண்டும். இந்த 786ஜ பிறை வடிவுக்குள் அமைத்து அந்த வட்டத்துக்குள் நட்சத்திரம் அமைப்பதும் வழக்கத்தில் உள்ளது அது இஸ்லாத்தின் சின்னமாகவும் ஆக்கப்பட்ட்டுள்ளது. பிறை வடிவுக்குள் இப்படி நட்சத்திரம் வருவது விஞ்ஞான ரீதியில் சாத்தியமானது தானா? பிறைக்குள் நட்சத்திரத்தை யாரேனும் பார்த்திருக்கின்றீர்களா? விஞ்ஞானத்திற்கு வித்திட்ட இஸ்லாத்தின் சின்னமே அஞ்ஞானமா?
 

சோதனைகள்..

 ABU ANAS. (ABU DHABI)
-- மனிதர்களின் வாழ்க்கையில் சோதனைகள் என்பது அன்றாடம் நிகழக்கூடியதாகவே உள்ளது. முஸ்லிம்களின் செயல்கள் அனைத்தும் மறுமைக்காகவே உள்ளது. இவ்வுலக சோதனைகளில் மனமுடைந்து விடாமலிருக்க பின்வரும் குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் உதவும்.

‘அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 9:51

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. அல்லாஹ்வின் உதவி எப்போது? என்று ( இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர் .கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

திருக்குர்ஆன் 2:214

நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல்
விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான்.
பொய்யர்களையும் அறிவான்.

திருக்குர்ஆன் 29:2,3

ஒரு மனிதருக்கு (மறுமையில் ) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)

நூல்: திர்மிதீ 2319

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது
விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 2323

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

திருக்குர்ஆன் 2:286

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5030

“ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் , அது அல்லாத வேறு எந்தத் துன்பமாயினும் ( அதற்கு ஈடாக) , மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5023

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை , அவர்கள் அதன்படி செயல்படாத வரை , அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை) மன்னித்துவிடுகிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6664

நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில் சில (தடுமாற்றமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ)காரியமாகக் கருதுகிறோம்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு
நபித்தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு, “அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

நூல் : முஸ்லிம் 188

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர் ; ( தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க , இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன் என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால் ,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6069

” மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் ” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5778

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 12:87