புதன், 9 பிப்ரவரி, 2011

அபூலஹபுடைய கரங்கள்


  நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த செய்தியை அவர்களின் பெரிய தந்தை அபூலஹபிடம் கூறுவதற்காக அவனது அடிமைப்பெண் ஓடிவரும்போது மகிழ்ச்சி மிகுதியால் அந்தப் பெண்ணையே தன் சுட்டுவிரல் நீட்டி விடுதலை செய்தான். இதன் காரணமாக அவன் நரகில் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, அந்த விரலை மட்டும் நரகம் தீண்டாது. மாறாக அந்த விரலிலிருந்து நீர் சுரந்து கொண்டிருக்கும் அதைச் சுவைத்து அவன் தாகம் தீருவேன். இப்படி ஒரு கதையை பல்வேறு நூல்களிலும் மீலாது மேடைகளிலும் நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். இதை நாம் விரிவாக ஆராய்வோம்.
 நபிகள் நாயகம் அவர்களுக்கு எத்தனையோ எதிரிகள் இருந்திருந்தும் அல்லாஹ்வினால் குர்ஆனில் இவனைத் தவிர வேறு எவரும் (தனிப்பட்ட முறையில்) சபிக்கப்படவில்லை. இவனை சபிப்பதற்கு என்றே தனியாக அல்லாஹ் ஒரு சூராவை அருளி இருக்கிறான்.
எவர்கள் (அல்லாஹ்வை) நிராகரித்து விட்டு காபிர்களாகவே இறந்தும் விடுகிறார்களோ, அவர்கள் மீது அல்லாஹ், மனிதர்கள், மலக்குகள் அனைவரின் சாபமும் உண்டு. மேலும் (அந்த நரகத்தில்) என்றென்றும் தங்கி விடுவர். அவர்களின் வேதனை (கொஞ்சமும்) குறைக்கப்படவும் மாட்டாது. (அந்த வேதனையிலிருந்து சிறிதும் ஓய்வு வழங்கப்படவும் மாட்டாது (குர்ஆன் 2:161,62) என்ற வசனமும், ஏறக்குறைய இதே கருத்தை வலியுறுத்துகின்ற 2:86, 3:88 வசனங்களும் ஒரு உண்மையை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.
அதாவது, காபிர்களாக இறந்துவிட்ட யாருக்கும் தண்டனையிலிருந்தும் சலுகையோ அல்லது தண்டனைக் குறைப்போ அறவே கிடையாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது. சாதாரண காபிர்களுக்கே இந்த நிலை என்றால் மிகவும் கொடியவனாக திகழ்ந்த அபூலஹபுக்கு மட்டும் எப்படி தண்டனையை இலேசாக்க முடியும் திருக்குர்ஆனின் கருத்துக்கு முற்றிலும் முரண்பட்ட இந்த நிகழ்ச்சியை உண்மை என்று எப்படி ஏற்றுக் கொள்வது?
அண்ணல் நபி  அவர்கள் தனது உறவினரை எல்லாம் ஒரு மலை அடிவாரத்தில் கூட்டி தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் போது எல்லோரும் மெªனமாகக் கலைந்து செல்ல அபூலஹபுடைய கரங்கள் மட்டும் மண்ணை வாரி பூமான் நபி அவர்கள் மீது இறைத்ததோடு மட்டுமன்றி, இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? நீ அழிந்து போ! என்று சொல்லி சென்றானே அந்தக் கரங்களை அல்லது அதன் ஒரு பகுதியான விரல்களை நரகம் தீண்டாது என்றால் இதை உண்மை என்று எப்படி ஏற்பது?
அபூலஹபுடைய இரண்டு கைகளும் நாசமாட்டும் மேலும் அவனும் நாசமாகட்டும் (குர்ஆன் 111:2) என்று திருக்குர்ஆன் அவனது கரங்கள் நாசமாகட்டும் என்று கூறும் போது அந்தக் கையில் ஒரு பகுதியாகத் திகழும் ஒரு விரல் மட்டும் நாசமாகாது என்பது அல்லாஹ்வின் கருத்துடன் மோதும் நிலை அல்லவா? அல்லாஹ்வின் சொல்லை பொய்யாக்குகின்ற இந்தக் கற்பனைக் கதையை எப்படி இஸ்லாமிய உலகம் உண்மை என்று ஏற்றுக் கொண்டுள்ளது?
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றது என்பது நபிமொழி. அபூலஹப் தன் விரல் அசைந்து அடிமைப்பெண்ணை விடுதலை செய்யும் போது அவனது எண்ணம் என்ன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். அகில உலகிற்கும் வழிகாட்டியாகத் திகழும் அல்லாஹ்வின் தூதர் உலகில் பிறந்து விட்டார்கள் என்பதற்காக அவன் அவ்வாறு செய்யவில்லை, மாறாக தனது தம்பி அப்துல்லாஹ்வுக்கு குழந்தை பிறந்து விட்டது என்ற செய்திக்காகவே உரிமை விட்டான். ரசூலுல்லாவை அல்லாஹ்வின் தூதர் என்று உணர்ந்து செய்த செயலல்ல. குடும்பப் பாசத்தை அடிப்படையாக வைத்து செய்யப்பட்ட காரியத்திற்கெல்லாம் அல்லாஹ்விடத்தில் எந்த மதிப்பும் கிடையாது.
அண்ணல் நபி அவர்கள் குழந்தைப் பருவத்திலிருக்கும் போது எத்தனை காபிர்களின் கரங்கள் தொட்டுத் தூக்கி இருக்கின்றன! அந்தக் கரங்களுக்கும் நீர் சுரக்க வேண்டாமா? எத்தனை நெஞ்சங்கள் அவர்களைத் தழுவியுள்ளன! எத்தனை உதடுகள் முத்திமிட்டுள்ளன! அவர்களைச் கொஞ்சிய நாவுகள் தான் எத்தனை! அவர்களைச் சுமந்து திரிந்த தோள்கள் எத்தனை! அவர்கள் நரகில் வீழ்ந்து கிடக்கையில் அவர்களின் கைகளிலிருந்தும், இதழ்களிலிருந்தும், மார்புகளிலிருந்தும் தேன் சுரக்க வேண்டாமா? மொத்தத்தில் மக்கத்து காபிர்கள் அனைவரும் ரசூலுல்லாஹ்வின் சிறு பிராயத்தில் கொஞ்சி மகிழ்ந்தவர்கள் தானே? அவர்களுக்கு இது போன்ற சலுகை உண்டு என்ற விபரீத முடிவுக்கு இந்தக் கற்பனைக் கதை இட்டுச் செல்லாதா?
இந்தக் கதையை கூறுவோர் இவ்வளவு தெளிவான சான்றுகளுக்குப் பிறகும் அதை உண்மைப்படுத்த முயற்சிக்கின்றனர். புகாரியிலே இந்தக் கதை இடம் பெற்றுள்ளது எனக் கூறுகின்றனர். அதனால் இந்த விஷயத்தையும் தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது.
அபூலஹபுடைய குடும்பத்தினரில் ஒருவரது கனவில் விரலில் இருந்து நீர் சுரப்பதாகக் காண்பிக்கப்பட்டது என்பதே அந்தச் செய்தி. பல காரணங்களால் இது ஏற்க முடியாததாகும்.
1) கனவு என்பது மார்க்கமாகாது. கனவில் காட்டப்படுவது போல் நடக்கும் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை.
2) கனவில் கண்டவர் யார் என்பது தெரியவில்லை அபூலஹபின் குடும்பத்தினரில் முஸ்லிம்களும் இருந்தனர் முஸ்லிம் அல்லாதவரும் இருந்தனர். கனவு கண்டவர் யார் என்பது கூறப்படவில்லை.
3) இதைக் கூறுபவர் உர்வா என்பவர், இவர் அந்தக் காலக்கட்டத்தில், பிறக்காதவர். நபித்தோழர் அல்லர். கனவில் காட்டப்பட்டது இவருக்கு எப்படித் தெரிந்தது?
4) கனவு என்பது காண்பவருக்கு மட்டுமே தெரிந்ததாகும். அவர் சொல்லாமல் யாரும் அறிய முடியாது. அவ்வாறிருக்க உர்வாவுக்கு இது எப்படி தெரிந்தது.
5) எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கனவு நபி  அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் பெறவில்லை.
இந்தக் காரணங்களால் இந்தக் கனவை அடிப்படையாகக் கொண்டு கதைவிட முடியாது. குர்ஆனின் தெளிவான கருத்துக்களுக்கும் நபிகள் நாயகம்  அவர்களின் அருளுரைக்கும் முரண்பட்ட நிகழ்ச்சிகள், எந்த கிதாபுகளில் காணப்பட்டாலும், எவ்வளவு பெரிய ஆலிமின் வாயிலிருந்து தோன்றினாலும் அவைகள் தூக்கி எறியப்பட வேண்டும். இது போன்ற சிந்தனையும் வழிப்புணர்ச்சியும் சமுதாயத்திலில் தோன்றும் போது தீனுல் இஸ்லாம் நிமிர்ந்து நிற்கும். சிந்தனை புரட்சியை அல்லாஹ் முஸ்;லிம் சமுதாயத்திற்கும் வழங்குவானாக ஆமீன்!

கருத்துகள் இல்லை: