புதன், 28 டிசம்பர், 2011

இறை நேசர் என்பவர் யார்?


இறை நேசர் என்பவர் யார்?

Post image for இறை நேசர் என்பவர் யார்?

இறைவனால் நேசிக்கப்படும் நேசர்களே இறை நேசர்களாவர்! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரன்புக்கு உகந்தவர்கள் யார் என்பது இறுதித் தீர்ப்பு நாளில் அன்றோ தெரியும்! இவர், இவர் தாம் இறைநேசச் செல்வர்கள் என்னும் பட்டியலை இறுதி தீர்ப்பு நாளன்று தானே அல்லாஹ் வெளியிடுவான்.
இந்தப் பாமரர்கள், குறிப்பிட்ட கப்ருவாசிகளை இறைநேசர்கள் என்று எவ்வாறு உய்த்துணர்ந்தார்கள்? தர்காஹ்களுக்குள் அறைப்பட்டுக் கிடப்பவர்தான் இறைநேசர்’ என்றால் உலகில் வாழ்ந்த வாழ்கின்ற வாழப் போகின்ற முஸ்லிம்கள் – மூமின்கள் அனைவரும் ஷைத்தானுடைய நேசர்களா? தங்களை ஷைத்தான்களுடைய நேசர்கள் என்று கருதிக் கொள்பவர்கள் தாமே, குறிப்பிட்ட புதைக் குழிக்குள் அடங்கி இருப்பவரை இறைநேசராகப் போற்றிக் கொண்டாடுவார்! என்னே மதியீனம்?
அல்லாஹ் தன் வான் மறையிலே மிகத் தெளிவாக இறைநேசர்கள் என்பவர் எப்படிப்பட்ட தகுதியை உடையவர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறான்.
அல்லாஹ் எவரை நேசிக்கின்றான்?
“அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும் நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை – நன்மை செய்வோரை நேசிக்கின்றான்” (21:95)
இவ்விறைவசனத்தில் மூன்றுவகை இறைநேசர்கள் பற்றி கூறப்படுகின்றது.
1) அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவர்களை, அல்லாஹ் “இறைநேசர்” எனக் குறிப்பிடுகின்றான்.
2) தங்கள் கைகளாலேயே தங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதவர்களை “இறைநேசர்” என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
3) நன்மை செய்வோரை அல்லாஹ், “இறைநேசர்” எனச் சுட்டிக் காட்டுகின்றான்.
நாம் ஒன்றைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். சமுதாயத்துக்கு எந்த வகையிலும் பயன்படாத, ஞானிகளைப் போல்(?) பச்சைப் போர்வையுடன் (மெளனம் சாதித்து) அலைந்து திரிந்தவர்களை, வலியுல்லாஹ் (அல்லது) இறைநேசர் என்று பாமர மக்கள் முத்திரைக் குத்தி அவர்கள் இறந்தவுடன் அடக்கம் செய்து, சமாதி எழுப்பி “தர்காஹ்” பித்துக் கொண்ட சில தனவந்தவர்களின் உதவியுடன் சில லட்சங்களில் பெரிய கட்டடம் கட்டி ஆண்டு தோறும் பூஜைகள் – தேர் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அல்லாஹ்வே ‘வலீ” (பாதுகாவலன்) என்பதைக் கூட உணராத பாரமரர்களிடம் “வலீயுல்லாஹ்” என்பதாக தனி மனிதரைச் சுட்டிக் காட்டி. உண்டியல்களை நிரப்பி, பாவங்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், மொட்டை அடித்து, உடம்பில் அறவே ஆடையில்லாமல் அம்மணமாகத் திரிந்த ஒருவர் பாமரர்களால் இறைநேசராகக் கருதப்படுகின்றார். வாய்ப்பேசாமல் (மெளனியாக) அழுக்கு நிறைந்த ஆடையுடன் திரிந்த கையேந்திய மக்களுக்கு சர்க்கரை என்று மண்ணை அளிக் கொடுத்தவர் இறைநேசச் செல்வராக கருதப்படுகின்றார். “மகான் வாயிலிருந்து வரும் வார்த்தைகளால் தங்கள் துயரங்கள் நீங்காதா?” என்று தேட்டத்துடன் நாடி வந்த மக்கள் முன்னால், சொல்லவே நாகூசுகின்ற கெட்டவார்த்தைகளால் (பெண்களை கண்டபடி) ஏசியவர் இறைநேசராக அங்கீகரிக்கப்படுகின்றார். அமர்ந்து இருக்கும் நேரமெல்லாம் சீட்டு விளையாடி (சூதாடி), பீடி புகைத்துக் கொண்டு, எதுவும் பேசாமல் தெருவில் நடந்து போகும்போதே, தன் பைஜாமாவை இறக்கி, சாக்கடையில் மலம் கழித்து விட்டு, சுத்தம் செய்யாமல் பைஜாமாவைக் கட்டிக் கொண்டவர் இன்றைக்குப் பெரிய நகரம் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டு இறைநேசராக ஏற்றிப் போற்றப்படுகின்றார். நான் கற்பனையாகக் கூறவில்லை. நடந்த உண்மைச் சம்பவங்களை நினைவில் வைத்தே சுருக்கித் தந்துள்ளேன்.
இவர்களும் இறைநேசர்களே!
“……..யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள்) உறுதியாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்” (3:76)
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவர்களையும், எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்களையும் அல்லாஹ் தன்னடைய நேசர்களாக அறிவிக்கின்றார்கள்.
“(பயபக்தியுடையொர் எத்தகையோரென்றால்) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர, கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை) களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்” (3:134)
செல்வ நிலையிலும், ஏழ்மையிலும் அல்லாஹ்வின் பாதையில் செலவிடுபவர்களை அல்லாஹ், இறைநேசர்கள் எனக் கூறுகின்றான். தம்முடைய கட்டுக்கடங்காத கோபத்தை அடக்கிக் கொள்பவரை “இறை நேசர்” என அறிமுகப்படுத்துகின்றான். தனக்கு எதிராக ஒருவன் செய்யும் குற்றங்களை (குற்றம் செய்தவர்களை) மன்னிப்பவர்கள் இறை நேசர்களாகும் தகுதியைப் பெறுகின்றார்கள்.
“மூமின்களில் இருசாரர் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விரு சாரர்களுக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரர் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்தவர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில் (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால், உறுதியாக அவ்விரு சாரரிடையே சமாதானம் உண்டாக்குங்கள்”. (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்துக் கொள்ளுங்கள். உறுதியாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான்.” (49:9)
“எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடையப் பாதையில் போரிடுகிறார்களோ , நபி அவர்களை உறுதியாக(அல்லாஹ்) நேசிக்கின்றான்” (61:4)
அல்லாஹ்வின் நல்லடியார்களே! இறைநேசர்கள் யார்? யார்? என்பதை இச்சிறு கட்டுரையின் மூலம் ஓரளவுக்குச் சுட்டிக் காட்டியுள்ளேன். எல்லாம் வல்ல அல்லாஹ், அவன் உவக்கும் இறைநேசர்களாக நம்மனைவோரையும் ஆக்கி பேரருள் புரிவானாக! (ஆமின்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

irainesargal yendral yar yendru ungaluku theriya villai yendru nandraga therigirathu. . . . therinthu kondru karuthuraiyai veliyedungal. . .

பெயரில்லா சொன்னது…

allah yendral yar yendru mudalil therinthukondal. . . irainesargal yar yendru ungaluku theriyum. . .
by
irainesargalai nesipavan