வியாழன், 30 டிசம்பர், 2010

கடன்படுவோர் கவனத்திற்கு..

அன்பான முஸ்லிம் சகோதர சகோதரிகளே... முஸ்லிம் உம்மத்தைப் பொருத்தவரை அவர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளைப் போன்றவர்கள்.

'இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே' என்கிறான் இறைவன். (அல் குர்ஆன்)

சகோதரத்துவம் என்பது வெறும் சித்தாந்தமாக பேசப்பட வேண்டிய கொள்கையல்ல. அது இதயத்தாலும், உணர்வுகளாலும் பிணைந்திருக்க வேண்டிய உறவாகும். ஆனால் இன்றைக்கு இந்த உறவு முறை பெரும்பாலானவர்களிடத்தில் எப்படி இருக்கிறதென்றால் திருமணம் போன்ற சந்தோஷமான நேரங்களில் கூடி மகிழ்ந்து விட்டு செல்வதும் மரணத்திற்கு வந்து சோகமாக இருந்து விட்டுப் போவதுமாகத்தான் இருக்கிறது.

பிறருடைய துன்பங்களில் பங்கெடுக்கும் போக்கு வெகுவாக குறைந்துப் போன சூழலே நிலவுகிறது. முஸ்லிம்களுக்கு இது ஆரோக்யமான நிலையல்ல. ஏனெனில் முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய பண்புகளை இஸ்லாம் வெகுவாக சுட்டிக் காட்டி அது பிரதிபலிக்கும் முஸ்லிமை அது விரும்புகிறது. நல்ல பண்புகளைக் கொண்டுள்ள முஸ்லிமிற்கு இறைவனிடம் கிடைக்கவிருக்கும் வெகுமதிகளை குர்ஆன் நிறைய இடங்களில் எடுத்துக் காட்டுகிறது. சகோதரத்துவத்தின் அடையாளங்களில் ஒன்றாக இஸ்லாம் கூறும் பண்புதான் கட்டுரையின் தலைப்பு.

கடன் மனிதனை நிம்மதியற்ற நிலையில் உழல செய்யும் ஒரு சுமையாகும்.

ஒருவன் பட்டினி கிடக்கிறான் என்றால் அது அனது உடலை பாதிக்கும், வலிமையை குறைக்கும். ஆனால் அவன் உள்ளத்தால் எத்தகைய பாதிப்பும் அடையமாட்டான். ஒரு வேளை இல்லையென்றால் அடுத்த வேளை அவனுக்கு உணவு கிடைத்து விடும். அவன் ஆரோக்ய நிலையைப் பெற்று விடுவான்.

ஆனால் கடன்? அது தனிமனிதனோடு முடியும் பிரச்சனையல்ல. அவன் பாதிக்கப்படுவான். அந்த பாதிப்பு உலவியல் ரீதியாக நிகழ்வதால் மனம் உடல் என்று ஒருங்கிணைந்து பாதிப்பின் தாக்கம் விரியும். அவனை சார்ந்தோரும் பாதிக்கப்படுவார்கள். குடும்பம் இருந்தால் மனைவி - குழந்தைகள் என்று ஒட்டு மொத்த குடும்பத்தையும் அது பாதிக்கும்.

கடனை அடைக்க முடியாத சூழ்நிலை வரும் போது கண்டபடியான பேச்சுக்கும் செவி கொடுக்க வேண்டிய நிலை முதலில் உருவாகி பின்னர் அது மானத்தையும் இறுதியில் உயிரையும் கூட வாங்கி விடும்.

கடன் சுமை அழுத்தும் போது ஒண்டி இருக்கும் வீடு வாசல் கையை விட்டுப் போகும். கடனை அடைக்க முடியாத பட்சத்தில் குடும்பத்தோடு மடிவது தான் நல்லது என்ற படு பயங்கர நிலைக்குத் தள்ளப்பட்டு அது நடந்து விடும்.

இன்றைக்கு வரும் 'குடும்பத்துடன் தற்கொலை' என்ற செய்திகள் நூறு சதவிகிதம் கடன் சுமையின் பரிசேயாகும்.

கடன் சுமையால் இந்த உலகில் மட்டும் தான் இழிவு என்று நினைத்து விடக் கூடாது. இது தீர்ப்பு நாள் வரைத் தொடரும் இழிவாகும்.

இறைவனின் பாதையில் அவனுக்காக போரிட்டு கொல்லப்பட்டவர்கள் என்ன பாவம் செய்திருந்தாலும் அது மன்னிக்கப்படும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. ஏனெனில் அவன் செய்த பாவங்களை விட அவன் செய்துள்ள தியாகம் மகத்தானது. ஆம் இறைவனுக்காக உயிரை விடும் அந்த தியகத்திற்கு ஈடு எதுவுமில்லை. அவர்களின் உயிரு பரிக்கப்பட்ட உடனே அது சொர்க்கத்தில் நுழைந்து விடும் என்ற நற்செய்தியெல்லாம் குர்ஆனிலும் சுன்னாவிலும் இருக்கின்றது. இத்துனை சிறப்புக்குரியதாக வீர மரணம் இருந்த போதும் வீர மரணத்தால் ஏற்படும் செர்க்க வாழ்வை 'கடன்' தடுத்து விடும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

'உயிர் தியாகிகளின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும் கடனைத் தவிர' என்பது நபிமொழி. அவனது கடனுக்கு பிறர் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்றால் இத்துனைப் பெரிய தியாகம் செய்தும் அதன் பலனை அனுபவிக்க முடியாத பரிதாபமான சூழ்நிலை உருவாகி விடும்.

'நபி(ஸல்) அவர்களிடம் ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. இவர் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டுமா என்று நபி(ஸல்) கேட்டர்கள். 'ஆம்' என்று பதிலளிக்கப்பட்டது. உடனே நபி(ஸல்) தாம் ஜனாஸா தொழுகையை நடத்தாமல் ' உங்கள் சகோதரருக்கு தொழவையுங்கள்' என்று கூறி நகர்ந்து விட்டார்கள் என்ற செய்தி பல நபித் தோழர்கள் வழியாக பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமிய அரசாங்கம் இருந்து அங்கு இறைவனின் கலீஃபா (இறைவனின் ஆட்சியாளர்) ஆட்சிப் புரிந்தால் அவருக்கு கீழ் இருக்கும் முஸ்லிம் குடி மகன் கடன் பட்டு விட்டு அடைக்க முடியாமல் இறந்தால் அதை அடைக்கும் பொறுப்பை அந்த ஆட்சியாளர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

''இறை நம்பிக்கையாளனின் உயிர் (அவன் கடன்பட்டவனாக இருப்பின்) அவனுடைய கடன் அடைக்கப்படும் வரை அதனுடன் தொங்கிக் கொண்டிருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், திர்மிதீ

இறை ஆட்சியாளர்கள் இல்லாத பூமியில் கடன் சுமையால் அவதிப்படும் நம் சகோதரர்களுக்கு நாம் தான் கை கொடுக்க வேண்டும்.

கடன்காரர்களின் கடனையெல்லாம் நாம் அடைத்துக் கொண்டிருந்தால் இறுதியில் நாம் கடன் படும் நிலைத்தான் உருவாகும் என்று கிண்டலாக வெறும் சித்தாந்தம் பேசிக் கொண்டிருக்கும் நிலைக்கு நாம் அடிமைப்பட்டு விடக்கூடாது.

கடன் படும் அனைத்து முஸ்லிம்களுடைய கடனையும் செல்வந்தர்கள் அடைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை.

வசதி வாய்ப்பும் - பெருந்தன்மை மிக்க உள்ளமும் உள்ளவர்கள் கடனாளிகளின் சூழ்நிலையை அறிந்து அவர்களுக்கு அவசாகம் அளிப்பதோ அடைக்க முடியாத சூழ்நிலை வரும் போது அவரது கடனை தள்ளுப்படி செய்வதோ எத்தகைய பலனை ஏற்படுத்தும் என்பதை கீழுள்ள நபிமொழி தெளிவுப்படுத்துகிறது.

ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்'' என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி - 2391)

செல்வந்தர்களின் செல்வத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் 'ஜகாத்' நிதியை கடனுக்காக (கடன் காரர்களின் கடனை அடைக்க) செலவிட வேண்டும் என்று இறைவன் கூறுகிறான்.

நிச்சயமாக ஜகாத் என்பது பரம ஏழைகளுக்கும் - ஏழைகளுக்கும் - கடன்பட்டுள்ளவர்களுக்கும்...... உரியதாகும். (அல் - குர்ஆன் 9:60)

நம் செல்வத்தின் மீது வந்து விழும் கடன் சுமையான ஜகாத்தை நாம் வருடந்தோரும் பிரித்தெடுக்க வேண்டும். உரியவர்களுக்கு அதை கொடுத்தாக வேண்டும். இல்லையெனில் செல்வந்தர்களாக இருந்தும் மரணத்திற்கு பிறகு கடனாளிகளாக இறைவனை சந்திக்கும் நிலை ஏற்படும்.

இந்த வருடம் ரமளானை சந்திக்கப் போகிறோம். நன்மைகளுக்குரிய பலன்களை அள்ளி வழங்குகிற மாதம். இதில் கடனாளியின் கண்ணீர் துடைத்தால் அதன் பலன்கள் பலமடங்காக இறைவன் புறத்திலிருந்த நமக்கு கிடைக்கும்.

அரபுநாடுகளில் - ஐரோப்பிய நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் இந்த வருட ஜகாத்தை கடனாளிகளின் நல்வாழ்விற்கு செலவிட முடிவு செய்யுங்கள். இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் நிம்மதியும் பிரார்த்தனையும் உங்களை அனேக வழிகளில் உயர்த்தி வைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

கடன்படுவோர் கவனத்திற்கு..

கொடுப்பதற்கு செல்வந்தர்கள் இருக்கிறார்கள் அதனால் கடன் பட்டுக்கொண்டே இருப்போம் என்று முடிவு செய்யாதீர்கள். 'திருப்பி அடைக்க வேண்டும் என்ற நிலையில் பெறப்படும் எதுவும் பெறுபவருக்கு சுமையாக அமைந்து விடும். அடைக்க வேண்டும் என்கிற எண்ணமில்லாமல் பேருக்காக கடன் என்று எதையும் பெறாதீர்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, 'இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பத் தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்' என்று பதிலளித்தார்கள். (ஆய்ஷா(ரலி) புகாரி - 2397)

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (2387)

செல்வந்தர்களை இறைவன் நாடி கடன்கள் அடைக்கப்பட்டால் மீண்டும் கடன்படும் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை உணர்வுத்தேவை என்பதை கவனத்தில் வையுங்கள்.

கருத்துகள் இல்லை: